விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிக்கான பஞ்சாப் அணியில் ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் டி20 உலகக் கோப்பையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஷுப்மன் கில் கிரிக்கெட் வாழ்க்கையில் இது மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அண்மைக் காலமாக ஷுப்மன் கில் மிக மோசமான ஃபார்மில் இருப்பதாலும் மாறாக சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி வருவதாலும் துணிச்சலான இம்முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
இந்நிலையில் ஷுப்மன் கில்லின் அடுத்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 24 முதல் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டிக்கான 18 வீரர்கள் கொண்ட பஞ்சாப் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் சர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங்குடன் ஷுப்மன் கில்லும் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணி தனது 7 லீக் ஆட்டங்களையும் ஜெய்ப்பூரில் விளையாடுகிறது. முதல் ஆட்டத்தில் டிசம்பர் 24 அன்று மஹாராஷ்டிரத்தை எதிர்கொள்கிறது பஞ்சாப்.
மோசமான ஃபார்மில் உள்ள ஷுப்மன் கில் மீண்டும் தனது திறனுக்கு ஏற்ப விளையாட ஒரு வாய்ப்பாக விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிக்கான பஞ்சாப் அணி
ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஹர்னூர் பன்னு, அன்மோல்பிரீத் சிங், உதய் சஹரன், நமன் திர், சலில் அரோரா (விக்கெட் கீப்பர்), சன்வீர் சிங், ரமண்தீப் சிங், ஜஷன்பிரீத் சிங், குர்னூர் பிரார், ஹர்பிரீத் பிரார், ரகு சர்மா, கிரிஷ் பகத், கௌரவ் சௌதரி, சுக்தீப் பஜ்வா.
குரூப் சுற்று ஜனவரி 8 அன்று நிறைவடைகிறது. ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் குரூப் சுற்றில் முழுமையாக விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதன்பிறகு, அடுத்தடுத்த சுற்றுகளில் இவர்கள் பங்கேற்பது சந்தேகம். காரணம், நியூசிலாந்துடனான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 11-ல் தொடங்குகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 21-ல் தொடங்குகிறது. இந்தத் தொடர்களில் இவர்கள் பங்கேற்க வேண்டும். கடந்த விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணி காலிறுதிச் சுற்று வரை முன்னேறியது.
Shubman Gill | Team India | Punjab Squad | T20 World Cup | T20 World Cup Squad |