ஒருநாள் கிரிக்கெட்டில் 50 ஓவர்களையும் சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வீசி, மேற்கிந்தியத் தீவுகள் வித்தியாசமான சாதனையைப் புரிந்துள்ளது.
வங்கதேசத்துக்குப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேசம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது ஒருநாள் ஆட்டம் மிர்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களையும் முழுமையாக சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பந்துவீசியது. அகீல் ஹொசைன், ராஸ்டன் சேஸ், கேரி பியர், குடகேஷ் மோடி, அலிக் ஆதனேஸ் ஆகியோர் தலா 10 ஓவர்கள் வீசினார்கள்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி 44 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது 50 ஓவர்களையும் சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வீசியது மூலம், இச்சாதனையைப் படைத்த முதல் அணி என்ற பெயரைப் பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.
இலக்கை விரட்டிய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதுவரை 814 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ள வங்கதேசத்துக்கு ஓர் ஆட்டம் சமனில் முடிவது இதுவே முதல்முறை. இதன் காரணமாக சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் 10 ரன்கள் எடுத்தது. வங்கதேசத்தால் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியாமல் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.
West Indies | West Indies Cricket | Bangladesh | Super Over | 50 Overs of Spin | Shai Hope |