பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வாரிகன் சுழலில் மிரட்ட, மேற்கிந்தியத் தீவுகள் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்டும் முல்தானில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நோமன் அலி ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததால், அந்த அணி 54 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. குடகேஷ் மோடி அரைசதம் அடிக்க, கெமார் ரோச் மற்றும் ஜோமென் வாரிகன் கடைசி கட்டத்தில் ரன் சேர்த்தார்கள். இதனால், முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 163 ரன்கள் எடுத்தது. நோமன் அலி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பாகிஸ்தானில் சௌத் ஷகீல் மற்றும் முஹமது ரிஸ்வான் மட்டும் ஓரளவுக்குக் கூட்டணி அமைத்தார்கள். ரிஸ்வான் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார்கள். வாரிகன் சுழற்பந்துவீச்சில் தடுமாறிய பாகிஸ்தான் 154 ரன்களுக்கு சுருண்டது. வாரிகன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
9 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு கேப்டன் பிராத்வைட் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். மற்ற பேட்டர்கள் பெரியளவில் ரன்கள் சேர்க்காதபோதிலும், ஓரளவுக்கு ரன்கள் எடுத்ததால் அந்த அணி 244 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தானில் சஜித் கான் மற்றும் நோமன் அலி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
254 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி முதல் 4 பேட்டர்களை இழந்தது. பாகிஸ்தான் 76 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரிஸ்வான் மற்றும் சல்மான் அகா மட்டுமே சிறிது நேரம் தாக்குப்பிடித்தார்கள். சுழலில் ஆதிக்கம் செலுத்திய வாரிகன், பாகிஸ்தான் பேட்டர்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார். அவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்த பாகிஸ்தான் அணி 133 ரன்களுக்கு சுருண்டது.
இதன்மூலம், 120 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 1990-க்கு பிறகு பாகிஸ்தானில் பெறும் முதல் வெற்றி இது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது. இந்த டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய வாரிகன் ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடரில் மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமில்லாமல் பேட்டிங்கில், மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் அதிக ரன் எடுத்தவர்களில் 85 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதால், தொடர் நாயகன் விருதையும் அவரே வென்றார்.