கோப்புப்படம் ANI
விளையாட்டு

பும்ரா எப்போது விளையாட வருவார்?: அகர்கர் தகவல்

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பும்ராவுக்குப் பதில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

கிழக்கு நியூஸ்

ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி குறித்து பிப்ரவரி தொடக்கத்தில் தெரியவரும் என தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்பட்டது. அணி தேர்வு செய்யப்பட்ட பிறகு, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அகர்கர் வெளியிட்டார்.

ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் ஷுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளபோதும், துணை கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லைத் தேடிச் சென்றுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்து ஒருநாள் தொடரில் முதலிரு ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என்பதை அகர்கர் தெரிவித்தார். இங்கிலாந்து தொடரில் பும்ராவுக்குப் பதில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

பிஜிடி தொடரில் சிட்னி டெஸ்ட் பந்துவீச்சின்போது முதல் இன்னிங்ஸில் பாதியில் வெளியேறினார் பும்ரா. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை. ஸ்கேன் செய்வதற்காக டெஸ்ட் நடுவே மருத்துவமனை சென்றதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், காயத்தின் தன்மை மற்றும் விவரங்கள் குறித்து வெளிப்படையான அறிவிப்பு இல்லை.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போதும், பும்ராவின் காயம் குறித்து அகர்கர் தெளிவுபடுத்தவில்லை. "பும்ராவின் உடற்தகுதி குறித்த தகவலுக்காகக் காத்திருக்கிறோம். பிப்ரவரி தொடக்கத்தில் பிசிசிஐ மருத்துவக் குழு மூலம் அவருடைய உடற்தகுதி குறித்து தெரியவரும்" என்றார் அகர்கர்.

கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், "தற்போதைய நிலையில், பும்ரா குறித்து உறுதியாகக் கூற முடியவில்லை. எனவே, அவருடையப் பணியை யாரேனும் ஏற்க வேண்டும் என்பதால், அர்ஷ்தீப் சிங்கைத் தேர்வு செய்துள்ளோம்" என்றார்.

இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முஹமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெயிஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா.