விளையாட்டு

என் பேட்டிங் திறனில் சந்தேகமா?கூகுளில் தேடிப் பாருங்கள்: பும்ரா கிண்டல்

"டெஸ்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார் என்பதை நீங்கள் தேடிப் பார்க்க வேண்டும்."

கிழக்கு நியூஸ்

ஆஸ்திரேலியாவுடான தொடரில் தனக்குப் போதிய உதவி கிடைக்கிறதா என்ற கேள்விக்கு ஜஸ்பிரித் பும்ரா மிகவும் பொறுப்புடன் பதிலளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி தொடரின் மூன்றாவது டெஸ்ட் காபாவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. பும்ரா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பந்துவீச்சில் பும்ராவை மட்டுமே பெரிதும் சார்ந்திருப்பதாக எழும் விமர்சனங்களுக்கு இது வலு சேர்க்கும் வகையில் அமைந்தது.

இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. அதே

இதுதவிர மழையால் ஆட்டம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த பும்ராவிடம், மற்றவர்களிடமிருந்தது உதவி கிடைக்காதது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

"முதலில், பேட்டிங் குறித்த உங்களுடைய மதிப்பீடு என்ன? பேட்டிங் குறித்து பதிலளிப்பதற்கு நீங்கள் சரியான நபர் இல்லையென்றாலும், காபாவில் அணியின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது போதிய உதவி கிடைப்பதில்லை என ஏதும் வருத்தம் உள்ளதா? சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்த நிறையப் பந்துவீச்சாளர்கள் இல்லை என்ற எண்ணம் உள்ளதா?" என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஜஸ்பிரித் பும்ரா கூறியதாவது:

"சுவாரஸ்யமான கேள்வி இது. என்னுடைய பேட்டிங் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளீர்கள். டெஸ்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார் என்பதை நீங்கள் தேடிப் பார்க்க வேண்டும். நகைச்சுவை ஒரு புறம் இருக்கட்டும்.

அணியில் நாங்கள் ஒருவரையொருவர் குற்றம் சொல்வதில்லை. நீங்கள் இதைச் செய்திருக்க வேண்டும், நீங்கள் அதைச் செய்திருக்க வேண்டும் என்ற மனநிலைக்குச் செல்ல நாங்கள் விரும்பவில்லை.

ஓர் அணியாக நாங்கள் மாறுதலை அடைந்து வருகிறோம். நிறைய புதிய வீரர்கள் அணிக்குள் வருகிறார்கள். கிரிக்கெட் விளையாடுவதற்கு இது எளிதான இடம் அல்ல. இங்கு வேறான ஒரு சூழல் உள்ளது. இந்த ஆடுகளம் என்பது வேறான ஒரு சவால். எனவே, நாங்கள் அந்தக் கோணத்தில் அணுகவில்லை.

பந்துவீச்சுக் குழுவாக நாங்கள் ஒரு மாறுதலை அடைந்து வருகிறோம். எனவே, மற்றவர்களைக் காட்டிலும் நான் சற்று கூடுதல் ஆட்டங்களில் விளையாடியுள்ளதால், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பது தான் என்னுடையப் பணி. அவர்களுக்கு உதவ நான் முயற்சித்து வருகிறேன்.

அனைவரும் பாடம் கற்றுக்கொள்வார்கள், மேம்படுத்திக் கொள்வார்கள். இதன்மூலம், நிறைய புதிய வழிகளைக் கண்டறிவோம். எனவே, இந்தப் பயணத்தை எதிர்கொள்ள வேண்டும்" என்றார் பும்ரா.