சமூக ஊடகங்களில் தொடர்ந்து 5-வது முறையாக மிகவும் பிரபலமான அணி என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) பெற்றுள்ளது.
இன்ஸ்டகிராம், எக்ஸ், யூடியூப், பேஸ்புக் ஊடகங்களில் விராட் கோலியின் ஆர்சிபி பற்றி 2 பில்லியன் செயல்பாடுகள் அரங்கேறியுள்ளன. இது சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) விட 25 சதவீதம் அதிகம். சோசியல்இன்சைடர் மற்றும் எஸ்இஎம்ரஷ் தரவுகளின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடம்பெறும். ஆனால், அதிக ரசிகர்களைக் கொண்ட அணி என்றால் அதில் ஆர்சிபி கடும் போட்டியளிக்கும். ஆர்சிபி ஒரு முறை கூட கோப்பை வெல்லாதபோதிலும், அந்த அணிக்கான ஆதரவு என்பது மிகத் தீவிரமாக இருக்கும்.
இது டிஜிட்டல் தளங்களில் வெளிப்பட்டுள்ளது. அனைத்து சமூக ஊடகப் பக்கங்களிலும் ஆர்சிபி அணியை புதிதாக 50 லட்சம் பேர் பின்தொடரத் தொடங்கியுள்ளார்கள். இன்ஸ்டகிராமில் உலகளவில் அதிகம் பிரபலமான முதல் ஐந்து அணிகள் பட்டியலில் ஆர்சிபி இடம்பெற்றுள்ளது. ரியல் மேட்ரிட், எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்தபடியாக ஆர்சிபி உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய பிரபல அணிகளை ஆர்சிபி முந்தியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துணைத் தலைவர் ராஜேஷ் மேனன், 12-வது வீரர் படைக்கு (ஆர்சிபி ரசிகர்கள்) நன்றி தெரிவித்துள்ளார்.