இரண்டாவது ஒருநாள் ஆட்டத்திலும் சதமடித்தார் கோலி (கோப்புப்படம்) ANI
விளையாட்டு

விராட் கோலி மீண்டும் சதம்: சாதனை மேல் சாதனை! | Virat Kohli | IND v SA |

ருதுராத் கெயிக்வாட் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்துள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட்டில் 52-வது சதத்தை அடித்த கோலி 135 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதன்மூலம், ஒரு வடிவில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையைக் கோலி முறியடித்தார். டெஸ்டில் 51 சதங்கள் அடித்திருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

இந்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் ராய்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் தொடக்க பேட்டர்கள் யஷஸ்வி ஜெயிஸ்வால் 22 (38), ரோஹித் சர்மா 14 (8) எடுத்து ஆட்டமிழந்தார்கள்.

இதன்பிறகு விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் கூட்டணியைக் கட்டமைத்தார்கள். இருவரும் சீரான வேகத்தில் விளையாட, ரன் ரேட்டும் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ருதுராஜ் கெயிக்வாட் 52 பந்துகளில் அரை சதம் அடித்தார். கோலி 47 பந்துகளில் அரை சதம் அடித்தார். அரை சதம் கடந்தவுடன் ரன் குவிக்கும் வேகத்தை இருவரும் அதிகரித்தார்கள். ருதுராஜ் கெயிக்வாட் 77 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். இவர் 83 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து, விராட் கோலி 90-வது பந்தில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது கோலியின் 53-வது ஒருநாள் சதம்.

11-வது முறை

ஒருநாள் கிரிக்கெட்டில் 11-வது முறையாக தொடர்ச்சியாக இரு சதங்களை அடித்துள்ளார் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தவொரு வீரரும் இந்தளவுக்கு தொடர்ச்சியாக இரு சதங்களை அடித்ததில்லை.

84-வது சதம்

ஒருநாள் கிரிக்கெட்டில் 53-வது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் இது அவருக்கு 84-வது சதம். அதிக சதங்கள் அடித்தவர்களில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 71 சதங்களுடன் இருக்கிறார். ஓய்வு பெறாமல் விளையாடி வரும் வீரர்களில் ஜோ ரூட் 58 சதங்களுடன் உள்ளார்.

34-வது இடத்தில் சதம்

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 33 வெவ்வேறு இடங்களில் சதமடித்துள்ளார் கோலி. ராய்பூரில் இன்று சதமடித்ததன் மூலம், 34-வது இடத்தில் சதமடித்துள்ளார். வெவ்வேறு இடங்களில் அதிக சதம் அடித்தவர்களில் சச்சின் டெண்டுல்கர் (34) சாதனையை கோலி சமன் செய்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா (26 வெவ்வேறு இடங்கள்) உள்ளார்.

Virat Kohli | Team India | Ruturaj Gaikwad | IND v SA | India v South Africa | India vs South Africa | IND vs SA | Kohli Century | Ruturaj Gaikwad Century |