ANI
விளையாட்டு

ரஞ்சி கோப்பை: கோலி, ராகுல் விளையாடவில்லை

ரிஷப் பந்த் (தில்லி), ஷுப்மன் கில் (பஞ்சாப்), ரவீந்திர ஜடேஜா (சௌராஷ்டிரம்) ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடுகிறார்கள்.

கிழக்கு நியூஸ்

விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் காயம் காரணமாக ரஞ்சி கோப்பை அடுத்த சுற்றில் விளையாடவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது, பிஜிடி தொடரை 1-3 என்ற கணக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இழந்தது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முதன்முறையாகத் தகுதி பெறாதது என இந்திய அணி அண்மைக் காலமாக மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பிசிசிஐ கடந்த வார இறுதியில் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திய அணியின் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க முதல் கட்டுப்பாடாக, இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கும் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கும் வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாட ரிஷப் பந்த் (தில்லி), ஷுப்மன் கில் (பஞ்சாப்), ரவீந்திர ஜடேஜா (சௌராஷ்டிரம்) உள்ளிட்டோர் தயாராகி வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இவர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கேப்டன் ரோஹித் சர்மா மும்பை அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டார். எனினும், இவர் மும்பை அணிக்காக விளையாடுவது உறுதி செய்யப்படாமலே இருந்தது.

தில்லி அணிக்கான உத்தேச அணியில் விராட் கோலி இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், காயம் காரணமாக கோலி ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

பிஜிடி தொடர் முடிவடைந்தபோது கோலிக்கு கழுத்துப் பகுதியில் வலி இருந்ததாகவும், ஜனவரி 8 அன்று இதற்காக அவர் ஊசி போட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜனவரி 23 அன்று தொடங்கும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் கோலி பங்கேற்கவில்லை. பிசிசிஐ மருத்துவக் குழுவினரிடம் தற்போதும் வலி இருப்பதாக விராட் கோலி கூறியதாக ஈஎஸ்பிஎன் கிரிகின்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது.

கேஎல் ராகுல் முழங்கை பிரச்னை காரணமாக பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 30 அன்று தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் இருவரும் விளையாடுவார்களா என்பது பின்னர் தெரியவரும்.

இதனிடையே, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இந்த அணியில் இருவரும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.