@bcci
விளையாட்டு

முதல் டெஸ்ட்: கடைசிப் பந்தில் ஆட்டமிழந்த கோலி!

கோலி - சர்ஃபராஸ் கான் கூட்டணி 136 ரன்கள் சேர்த்தது.

யோகேஷ் குமார்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 3-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதல் திணறிய இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக ரிஷப் பந்த் 20 ரன்களும், ஜெயிஸ்வால் 13 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில் ஒ ரோர்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. கான்வே 91 ரன்களும், வில் யங் 33 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திராவின் அதிரடி சதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்தது.

கடைசி வரை விளையாடிய ரச்சின் ரவீந்திரா 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்தார். டிம் சௌதி 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா - ஜெயிஸ்வால் அசத்தலான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் சேர்ந்து 72 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெயிஸ்வால் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா அரைசதம் அடித்து 52 ரன்களில் வெளியேறினார். இவர்களது விக்கெட்டுகளை அஜாஸ் படேல் வீழ்த்தினார்.

இதன் பிறகு கோலி - சர்ஃபராஸ் கான் கூட்டணி அமைத்து வேகமாக ரன்கள் எடுத்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்கள். சர்ஃபராஸ் கான் தனது 4-வது அரை சதத்தை எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களைப் பூர்த்தி செய்தார் கோலி. இருவரும் நாள் முடியும் வரை விக்கெட்டை இழக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

இவர்களின் கூட்டணியால் இந்திய அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக கோலிக்கு பெங்களூரு ரசிகர்களிடம் இருந்து பேராதரவு கிடைத்தது. இந்த கூட்டணியை உடைக்க நியூசிலாந்து அணி கிளென் பிலிப்ஸுக்கு வாய்ப்பு அளித்தது. அவரும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு 3-வது நாளின் கடைசி பந்தில் கோலியை வீழ்த்தினார். கோலி, ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கோலி - சர்ஃபராஸ் கூட்டணி 136 ரன்கள் சேர்த்தது. 3-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து 125 ரன்கள் பின்தங்கியுள்ளது.