விளையாட்டு

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு

ச.ந. கண்ணன்

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி இறுதிச் சுற்று ஆட்ட நாயகனாகவும் பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.

இந்நிலையில் பரிசளிப்பு விழாவில் பேசிய விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுவே என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்தாலும் இதனை அறிவித்திருப்பேன். அடுத்த தலைமுறைக்கு வழிவிடவே இம்முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2010 முதல் விளையாடி வந்த கோலி இதுவரை 125 ஆட்டங்களில் ஒரு சதம், 38 அரை சதங்களுடன் 4188 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 137.04. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 82* ரன்கள் எடுத்தது கோலியின் மிகச்சிறந்த டி20 ஆட்டமாக ரசிகர்களால் போற்றப்படுகிறது.