வினேஷ் போகத் @vineshphogat
விளையாட்டு

ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்ற வினேஷ் போகாட்!

உலகின் நெ.1 வீராங்கனையான சுசாகியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

யோகேஷ் குமார்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

11-வது நாளான இன்று மல்யுத்தம் 50 கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் உலகின் நெ.1 வீராங்கனையான சுசாகியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

2-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில், கடைசி 15 நொடிகளில் 3 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றார் வினேஷ் போகாட்.

இதற்கு முன்னதாக ஒரு சர்வதேச ஆட்டத்தில் கூட தோல்வி அடையாத சுசாகி, 2020 ஒலிம்பிக்ஸில் ஒரு புள்ளிகளைக் கூட இழக்காமல் தங்கப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் வினேஷ் போகாட் அவரை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளார்.