ஹனுமா விஹாரி
ஹனுமா விஹாரி ANI
விளையாட்டு

ஆந்திர கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லாச் சான்றிதழைக் கோரும் ஹனுமா விஹாரி

யோகேஷ் குமார்

ரஞ்சி கோப்பைப் போட்டியில் வேறு அணியில் விளையாட விரும்புவதாகவும், அதற்காக ஆந்திர கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லாச் சான்றிதழைக் கேட்டுள்ளதாகவும் பிரபல பேட்டர் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் - ஆந்திரா இடையிலான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தின்போது ஆந்திர கிரிக்கெட் சங்கத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, “என்னுடைய சுயமரியாதையை இழந்த இடத்தில் இனி எப்போதும் விளையாட மாட்டேன்” என ஹனுமா விஹாரி தெரிவித்தார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹனுமா விஹாரி கூறியதாவது: “நான் பெங்காலுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கேப்டனாக இருந்தேன். அந்த ஆட்டத்தில் நான் ஒரு வீரரை நோக்கிக் கத்தினேன். அந்த வீரரின் தந்தை ஓர் அரசியல்வாதி. அந்த வீரர் தனது தந்தையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். எனவே அந்த ஆட்டத்தில் வென்றிருந்தாலும் கூட, என்னை கேப்டன் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டனர்” என்றார். இதைத் தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆந்திர கிரிக்கெட் சங்கம் ஹனுமா விஹாரிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடர்பாக ஆந்திர கிரிக்கெட் சங்கம், “எதனால் அவ்வாறு நடந்துகொண்டார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக விஹாரிக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், இன்னும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. ஆந்திர கிரிக்கெட் அணிக்காக அவர் அளித்த பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம்” என பிடிஐ நிறுவனத்திடம் கூறியுள்ளது.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஹனுமா விஹாரி, “ரஞ்சி கோப்பையில் வேறு அணியில் விளையாட விரும்புகிறேன், அதற்காக ஆந்திர கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லாச் சான்றிதழைக் கேட்டுள்ளேன். அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்” என ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோவிடம் தெரிவித்துள்ளார்.