இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20யில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டி20 ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த முறையும் டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் பதில் முஹமது ஷமி களமிறங்கினார்.
ஃபில் சால்டுக்கு இந்த டி20 தொடர் சரியானதாக அமையவில்லை. ஹார்திக் பாண்டியா வீசிய 2-வது ஓவரில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க பேட்டர் பென் டக்கெட் இந்த டி20யில் மிரட்டலைத் தொடங்கினார். ஷமி ஓவரில் சிக்ஸர், பாண்டியா ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, வாஷிங்டன் சுந்தர் ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பவர்பிளேயில் அதகளப்படுத்தினார்.
பவர்பிளேயின் கடைசி ஓவரில் வருண் சக்ரவர்த்தி 3 ரன்களை மட்டும் கொடுத்து கட்டுப்படுத்தியதால், இங்கிலாந்து 6 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தது.
ரவி பிஸ்னாய் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து அவரை நெருக்கடிக்குள்ளாக்கினார் பட்லர். ஆனால், நடு ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்து வந்த வருண் சக்ரவர்த்தி பட்லர் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை உண்டாக்கினார். 26 பந்துகளில் அரைசதம் அடித்த பென் டக்கெட் 51 ரன்களுக்கு அக்ஷர் படேல் சுழலில் வீழ்ந்தார். ஹாரி புரூக், லிவிங்ஸ்டன் அதிரடிக்குத் தயாரான நேரத்தில் புரூக் விக்கெட்டை வீழ்த்தி, இந்தத் தொடரில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார் ரவி பிஸ்னாய்.
அடுத்து வந்த வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்தின் நடுவரிசை பேட்டர்களை வரிசையாக பெவிலியனுக்கு அனுப்பினார். இங்கிலாந்து பேட்டர்களும் உதவும் வகையில் பொறுப்பற்ற ஷாட்களை விளையாடினார்கள். ஜேமி ஸ்மித் சிக்ஸர் அடித்தாலும், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ஜேமி ஓவர்டன் முதல் பந்திலேயே போல்டானார். தனது கடைசி ஓவரில் பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தி, இந்தியாவுக்காக 2-வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் வருண் சக்ரவர்த்தி.
இங்கிலாந்து 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. தனிநபராகக் களத்திலிருந்த லிவிங்ஸ்டன் ரவி பிஸ்னாய் ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசினார். ஆனால், 18-வது ஓவரிலேயே பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார் லிவிங்ஸ்டன். இவர் 24 பந்துகளில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடில் ரஷித் மற்றும் மார்க் வுட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் மிக முக்கியமான 24 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சஞ்சு சாம்சனுக்கு வழக்கம்போல் ஷார்ட் பந்து திட்டத்துடன் இங்கிலாந்து வந்தது. இந்தத் திட்டத்துக்குப் பலியாகி ஷார்ட் ஆஃப் லெங்த் பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். பவுண்டரிகள் அடித்து வந்த அபிஷேக் சர்மா, பிரைடன் கார்ஸ் வீசிய அடுத்த ஓவரிலேயே 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் அவருக்கே உரித்தான ஷாட் மூலம் சிக்ஸர் அடித்தாலும், 14 ரன்களுக்கு மார்க் வுட் வேகத்தில் வீழ்ந்தார். இந்திய அணி பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி இடக்கை, வலக்கை பேட்டர்கள் களத்திலிருக்க வேண்டும் என்று விரும்புவதால், கடந்த ஆட்டத்தில் மூன்றாவது பேட்டராக களமிறங்கிய திலக் வர்மா இந்த முறை 4-வது பேட்டராக களமிறங்கினார். பவர்பிளே முடிந்தவுடன் ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அடில் ரஷித், தனது முதல் ஓவரிலேயே பந்தை மிக அற்புதமாக உள்பக்கம் திருப்பி திலக் வர்மாவை போல்ட் செய்தார்.
வாஷிங்டன் சுந்தருக்கு ஆட்டம் கைகூடவில்லை. ஹார்திக் பாண்டியா நிதானம் காட்டினார். 10 ஓவர்களில் இந்தியா 78 ரன்கள் எடுத்தது. வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் படிப்படியாக 10-ஐ தொட்டது. பெரிய ஷாட்டுக்கு முயன்று வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அக்ஷர் படேலுக்கும் டைமிங் கிடைக்கவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திட்டத்துக்கு ஏற்ப மிகக் கச்சிதமாகப் பந்துவீசினார்கள்.
கடைசி 4 ஓவர்களில் 64 ரன்கள் தேவை என்ற நிலையில், 27 பந்துகளில் 23 ரன்களுடன் விளையாடி வந்த ஹார்திக் பாண்டியா தனது ஆட்டத்தை மாற்றினார். மார்க் வுட் ஓவரில் சிக்ஸர் அடித்தார். அக்ஷர் படேல் பவுண்டரி அடித்து அதே ஓவரை நிறைவு செய்தார். ஆட்டத்தைக் கையிலெடுத்ததாக நினைத்தபோது, ஆர்ச்சர் பந்தில் அக்ஷர் படேல் 16 பந்துகளில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் பாண்டியா சிக்ஸர் அடித்தும் 9 ரன்கள் மட்டுமே கிடைத்தன.
ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல இடக்கை, வலக்கை பேட்டர்கள் திட்டத்துடன் இந்தியா விளையாடி வருவதால், துருவ் ஜுரெல் 8-வது பேட்டராக களமிறங்கினார். 18-வது ஓவரின் கடைசி பந்தில் ஜுரெல் அடித்த பந்தில் ரன் ஓடாமல் ஸ்டிரைக்கை தக்கவைத்தார் பாண்டியா.
அடுத்த ஓவருக்கு ஸ்டிரைக்கை தக்கவைத்தது பாண்டியாவுக்குப் பலனளிக்கவில்லை. ஓவர்டன் வீசிய ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இவர் 34 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் ஷமி ஒரு சிக்ஸர் அடித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட, முதல் பந்திலேயே ஜுரெல்லும் ஆட்டமிழந்தார். ஆட்டம் முடிந்தது. கடைசிப் பந்தில் பிஸ்னாய் பவுண்டரி அடித்தும் பலனில்லை. 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.
26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்திய அணி தோல்வியடைந்தபோதிலும், ஆட்டநாயகன் விருது வருண் சக்ரவர்த்திக்கு வழங்கப்பட்டது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கிடையிலான நான்காவது டி20 புனேவில் ஜனவரி 31 அன்று நடைபெறுகிறது.