ANI
விளையாட்டு

டி20 தரவரிசை: முதலிடத்தில் வருண் சக்ரவர்த்தி! | Varun Chakaravarthy | Asia Cup T20 |

பேட்டிங், பந்துவீச்சு, ஆல்-ரவுண்டர் என எல்லாவற்றிலும் இந்திய வீரர்களே முதலிடம். அணிகளுக்கான தரவரிசையிலும் இந்திய அணியே முதலிடம்.

கிழக்கு நியூஸ்

சர்வதேச டி20யில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பை டி20யில் விளையாடி வருகிறது. குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இவ்விரு ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி மொத்தம் 6 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே கொடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம், ஐசிசியின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல்முறையாக முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் வருண் சக்ரவர்த்தி. ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னாய் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய மூன்றாவது இந்தியப் பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார் வருண் சக்ரவர்த்தி. கடந்த மார்ச் மாதம் முதல் முதலிடத்திலிருந்த நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபியைப் பின்னுக்குத் தள்ளி வருண் முதலிடத்துக்கு வந்துள்ளார்.

இடக்கை சுழற்பந்துவீச்சாளர் அக்‌ஷர் படேல் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆசியக் கோப்பை டி20யில் இரு ஆட்டங்களிலும் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேற்றம் கண்டு 23-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பேட்டர்களுக்கான தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளார். ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக இவர் 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். பாகிஸ்தானுக்கு எதிராக 13 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார்.

டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. சர்வதேச டி20யில் பேட்டர்களுக்கான தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி முதலிடம். ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹார்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார். உலக சாம்பியன் என்பதற்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் இந்திய அணியும் இந்திய வீரர்களும் சர்வதேச டி20 தரவரிசையை அலங்கரித்துள்ளார்கள்.

பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் உள்ளார்கள். அபிஷேக் சர்மா முதலிடத்திலும் திலக் வர்மா 4-வது இடத்திலும் சூர்யகுமார் யாதவ் 7-வது இடத்திலும் உள்ளார்கள். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் வருண் சக்ரவர்த்தி முதலிடம், ரவி பிஷ்னாய் 8-வது இடம் என இரு இந்தியப் பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள்.

T20I Rankings | Team India | Varun Chakaravarthy | Abhishek Sharma | Hardik Pandya | Asia Cup | Asia Cup T20 | Asia Cup 2025 |