வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப்படம்) 
விளையாட்டு

விஜய் ஹசாரேவிலும் சதம்: சாதனைகளை உடைத்தெறியும் சூர்யவன்ஷி! | Vaibhav Suryavanshi |

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஏபி டி வில்லியர்ஸ் சாதனையையும் முறியடித்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.

கிழக்கு நியூஸ்

வெறும் 14 வயது 272 நாள்களே ஆன வைபவ் சூர்யவன்ஷி விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

36 பந்துகளில் சதமடித்ததன் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தன்வசப்படுத்தியுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி இன்று தொடங்கியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி பிஹார் அணிக்காக விளையாடுகிறார். பிளேட் பிரிவில் பிஹார், அருணாச்சலப் பிரதேசம் அணிகள் மோதி வருகின்றன. ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பிஹார் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க பேட்டராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 36 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையை தன் வசப்படுத்திய அவர் 59 பந்துகளில் 150 ரன்களை கடந்தார்.

2015-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஏபி டி வில்லியர்ஸ் 64 பந்துகளில் 150 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. இச்சாதனையையும் அவர் முறியடித்தார். 84 பந்துகளில் 15 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடித்த சூர்யவன்ஷி 190 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டைச் சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

ஐபிஎல் 2025-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார் சூர்யவன்ஷி. ஏலத்தில் எடுத்தபோது, இவருக்கு வயது 13. குஜராத் டைடன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து அதிரவைத்தார். இந்த ஆட்டத்தில் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இந்த சத வேட்டை இன்னும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் 52 பந்துகளில் சதமடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய யு-19 அணிக்கு எதிராக இளையோர் டெஸ்டிலும் சதம் விளாசினார் வைபவ் சூர்யவன்ஷி. இந்த டெஸ்டில் 86 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார்.

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பைப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக கடந்த மாதம் 42 பந்துகளில் 144 ரன்கள் விளாசினார். இதில் 32 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இம்மாத தொடக்கத்தில் சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் மஹாராஷ்டிரத்துக்கு எதிராகச் சதமடித்தார். 61 பந்துகளில் 108 ரன்கள் எடுத்த அவர், சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதேசமயம், யு-19 ஆசியக் கோப்பை டி20 போட்டியில் 95 பந்துகளில் 171 ரன்கள் விளாசினார். இதுவும் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராகவே அடிக்கப்பட்டது.

அடுத்தடுத்து சதங்களை விளாசி வரும் அவர், தற்போது விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியிலும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். 2025 மறக்க முடியாத ஆண்டாகவே சூர்யவன்ஷிக்கு அமைந்துள்ளது.

Vaibhav Suryavanshi created history in the Vijay Hazare Trophy by scoring a scintillating century, becoming the youngest batter ever to register a hundred in List A cricket.

Vaibhav Suryavanshi | Vijay Hazare Trophy | Bihar | Arunachal Pradesh | Suryavanshi Century |