கோப்புப்படம் ANI
விளையாட்டு

31 பந்துகளில் 86 ரன்கள்: சூர்யவன்ஷி முறியடித்த சாதனை!

இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் 3 இன்னிங்ஸில் 213.09 ஸ்டிரைக் ரேட்டில் 179 ரன்கள் குவித்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

இங்கிலாந்துக்கு எதிரான இளையோர் ஒருநாள் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர்களை நொறுக்கி சாதனை படைத்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலிரு ஒருநாள் ஆட்டங்களில் இந்திய யு-19 அணி ஓர் ஆட்டத்திலும் இங்கிலாந்து யு-19 ஓர் ஆட்டத்திலும் வெற்றி பெற்றன.

மூன்றாவது ஆட்டம் ஜூலை 2 அன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. மழையால் ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 40 ஓவர்கள் என ஆட்டம் குறைக்கப்பட்டது.

இந்திய அணி 34.3 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த அதிரடியான வெற்றிக்கு முக்கியக் காரணம், 14 வயது வைபவ் சூர்யவன்ஷி. முதலிரு ஆட்டங்களில் 40-களை கடந்த சூர்யவன்ஷியால் அரை சதத்தை அடிக்க முடியவில்லை. மூன்றாவது ஆட்டத்தில் 20 பந்துகளில் அரை சதம் அடித்து கலக்கினார்.

இந்த இன்னிங்ஸில் அவர் மொத்தம் 9 சிக்ஸர்களை நொறுக்கினார். இதன்மூலம், இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார் சூர்யவன்ஷி. இதற்கு முன்பு ராஜ் அங்கட் பவா மற்றும் மந்தீப் சிங் தலா 8 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

ஐபிஎல் போட்டியில் அதிரடி சதம் மூலம் அதீத வெளிச்சத்தைப் பெற்ற சூர்யவன்ஷி, தனது சிறப்பான ஆட்டத்தை இங்கிலாந்திலும் தொடர்கிறார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் 3 இன்னிங்ஸில் 213.09 ஸ்டிரைக் ரேட்டில் 179 ரன்கள் குவித்துள்ளார்.