ரஞ்சி கோப்பைப் போட்டியில் பிஹார் அணியின் துணை கேப்டனாக 14 வயது வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பை 2025-26 பருவம் அக்டோபர் 15 அன்று தொடங்குகிறது. இப்போட்டி தொடங்க இரு நாள்களே உள்ள நிலையில், இப்போட்டிக்கான பிஹார் அணியை அம்மாநில கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முதலிரு சுற்றுகளுக்கான பிஹார் அணி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சகிபுல் கனி தலைமையிலான பிஹார் அணியின் துணை கேப்டனாக 14 வயது வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 5 முதல் தர ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள சூர்யவன்ஷி, 10 இன்னிங்ஸில் 100 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இருந்தபோதிலும், அண்மைக் காலமாக தனது சிறப்பான பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் அவர் ஈர்த்து வருகிறார்.
ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டதன் மூலம், 13 வயதில் ஐபிஎல் போட்டிக்குத் தேர்வான இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஐபிஎல் 2025-ல் 7 ஆட்டங்களில் விளையாடி 206.55 ஸ்டிரைக் ரேட்டில் 252 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தில் யு-19 ஒருநாள் தொடரில் 5 ஆட்டங்களில் 174.01 ஸ்டிரைக் ரேட்டில் 355 ரன்கள் விளாசினார்.
ஆஸ்திரேலிய யு-19 அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற நான்கு நாள் ஆட்டத்தில் 78 பந்துகளில் சதமடித்து கலக்கினார். இந்தத் தொடரில் மூன்று இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் தான் ரஞ்சி கோப்பையின் முதலிரு சுற்றுகளுக்கான பிஹார் அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். 2026 தொடக்கத்தில் நடைபெறும் யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதால், ரஞ்சி கோப்பைப் போட்டியின் அடுத்தடுத்த சுற்றுகளில் இவர் இடம்பெறுவது சந்தேகமாக உள்ளது.
பிஹார் அணி
பியுஷ் குமார் சிங், பாஸ்கர் துபே, சகிபுல் கனி (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி (துணை கேப்டன்), அர்னவ் கிஷோர், ஆயுஷ் லோஹாருகா, பிபின் சௌரப், அமோத் யாதவ், நவாஸ் கான், சகிப் ஹுசைன், ராகவேந்திர பிரதாப் சிங், சச்சின் குமார் சிங், ஹிமான்ஷு சிங், காலித் அலாம், சச்சின் குமார்.
Vaibhav Suryavanshi | Bihar Ranji Team | Bihar Squad | Ranji Trophy | Vaibhav Suryavanshi Vice Captain |