2026 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற அமெரிக்க அணி! @icc
விளையாட்டு

2026 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற அமெரிக்க அணி!

2026 டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

யோகேஷ் குமார்

நடப்பு டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதன் மூலம், 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. நேற்று நடைபெறவிருந்த அமெரிக்கா - அயர்லாந்து ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் அமெரிக்க அணி ஒரு புள்ளி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி வெளியேறியது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதன் மூலம், 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது அமெரிக்க அணி.

2026 டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்தாண்டு போல 2026 டி20 உலகக் கோப்பையிலும் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில், போட்டியை நடத்தும் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

மேலும், தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் இனி தகுதி பெறும் 2 அணிகள் உட்பட 7 அணிகளும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாத அணிகள், ஐசிசியின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் முன்னிலை வகிப்பதைத் பொருத்து 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். எனவே 12 அணிகள் இவ்வாறு தகுதி பெறும், மீதமுள்ள 8 அணிகள் தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாடி அதில் வெற்றி பெறுவதைப் பொருத்து முன்னேறும்.