ANI
விளையாட்டு

ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்த விமர்சனம்: மௌனம் கலைத்த பிசிசிஐ

"பொறுப்புள்ள பதவியில் உள்ள ஒருவரிடமிருந்து நம் கேப்டன் குறித்து..."

கிழக்கு நியூஸ்

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்த விமர்சனத்துக்கு பிசிசிஐ தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முஹமது எக்ஸ் தளப் பக்கத்தில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றும் இந்தியாவில் மிகவும் ஈர்க்கப்படாத ஒரு கேப்டன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவருடைய இந்தப் பதிவு நாடு முழுக்க பெரியளவில் பேசுபொருளானது. பாஜக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. காங்கிரஸ் கட்சியிலிருந்து இந்தக் கருத்துக்கு ஆதரவு கிடைக்கப்பெறவில்லை.

"ராகுல் காந்தி தலைமையில் 90 முறை தோல்விகளைச் சந்தித்தவர்கள் ரோஹித் சர்மாவின் தலைமைப் பண்பு ஈர்க்கும் வகையில் இல்லை என்கிறார்கள். தில்லியில் 6 முறை டக், 90 முறை தேர்தலில் தோல்விகள் ஈர்க்கும் வகையில் உள்ளன. ஆனால், டி20 உலகக் கோப்பையை வெல்வது ஈர்க்கும் வகையில் இல்லை. ரோஹித் சர்மா கேப்டனாக அற்புதமான சாதனைகளைப் படைத்துள்ளார்" என பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ரஞ்சனி பாட்டில் கூறுகையில், "யாரையும் உடல்ரீதியாக இழிவுபடுத்துவதை கட்சியும் தனிப்பட்ட முறையில் நானும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவுக்காக விளையாடும் விளையாட்டு வீரர் ஒருவரைப் பற்றி இவ்வாறு பேசுவது சரியல்ல. அவரிடமிருந்து (ஷாமா முஹமது) விளக்கம் கேட்கப்படும்" என்றார்.

இந்த விவகாரம் பெரும் பேசுபொருளான நிலையில், பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ளார்.

"இந்திய அணி ஐசிசி போட்டியில் விளையாடி வருகிறது. அரையிறுதியில் விளையாடக் காத்திருக்கிறது. பொறுப்புள்ள பதவியில் உள்ள ஒருவரிடமிருந்து நம் கேப்டன் குறித்து இதுமாதிரியான கருத்துகள் வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று தேவஜித் சைகியா தெரிவித்தார்.

இதனிடையே, தனது எக்ஸ் தளப் பதிவு குறித்து விளக்கமளித்த ஷாமா முஹமது "ஒரு விளையாட்டு வீரரின் உடற்தகுதி குறித்த பொதுவான ஒரு பதிவுதான் அது. உடல்ரீதியாக இழிவுபடுத்தும் செயல் அல்ல. ஒரு விளையாட்டு வீரர் எப்போதும் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அவர் சற்று கூடுதல் எடையுடன் இருந்தார். எனவே தான் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு செய்தேன். எந்தக் காரணமும் இல்லாமல் நான் தாக்கப்படுகிறேன். முந்தைய கேப்டன்களுடன் ஒப்பிட்டு இதைப் பதிவு செய்தேன். எனக்கு அதற்கான உரிமை உள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது? இது ஜனநாயகம்" என்றார் ஷாமா முஹமது.