ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் கோப்பை வென்ற பிறகு பேசிய விராட் கோலி உணர்வுபூர்வமான தருணம், ஏபி டி வில்லியர்ஸ், அணி நிர்வாகம், ரசிகர்கள் என எல்லோரைப் பற்றியும் பேசியுள்ளார்.
மேத்யூஸ் ஹேடனிடம் விராட் கோலி மனம் திறந்து பேசியதாவது:
"இந்த வெற்றி அணிக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ரசிகர்களுக்கும் முக்கியமானது. 18 வருடங்கள்... ஆர்சிபிக்காக என் இளமை, உச்சம் மற்றும் அனுபவம் என எல்லாவற்றையும் அர்ப்பணித்துள்ளேன். ஒவ்வோர் ஆண்டும் வெற்றி முயற்சித்து என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். இறுதியாக கோப்பையை வெல்லும்போது, நம்பமுடியாத உணர்வு. இப்படியொரு நாள் வரும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கடைசி பந்துவீசும்போது நான் உணர்ச்சிவயப்பட்டேன்.
ஆர்சிபிக்காக ஏபி டி வில்லியர்ஸ் செய்தது மகத்தானது. இந்த வெற்றி எங்களுடையது போலவே உங்களுடையதும் என டி வில்லியர்ஸிடம் கூறினேன். நீங்களும் எங்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என டி வில்லியர்ஸிடம் கூறினேன். ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகளாகியும் ஆர்சிபிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்றவர்களிடம் அவரே முதலிடம். இதிலிருந்தே ஐபிஎல் போட்டியில் ஆர்சிபியில் அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். வெற்றி மேடையில் நின்று கோப்பையை ஏந்த டி வில்லியர்ஸ் தகுதியானவர்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், கிரிக்கெட் வாழ்க்கையில் இதற்கு மிக முக்கிய இடமுண்டு. ஏற்கெனவே கூறியதுபோல ஆர்சிபிக்காக 18 ஆண்டுகள் என்னால் முடிந்த அனைத்தையும் அர்ப்பணித்துள்ளேன். என்ன நடந்தாலும், அணிக்காக விஸ்வாசமாக இருந்துள்ளேன். நான் வேறு மாதிரியாக நினைத்த தருணங்களும் உண்டு. இருந்தாலும், அணியுடன் உறுதியாக இருந்தேன். அணியும் என்னுடன் இருந்தது. அவர்களுக்காக வெற்றி பெற வேண்டும் என எப்போதும் கனவு கண்டது உண்டு. கோப்பையை வெல்வதைவிட மிகவும் சிறப்பான தருணம் இது. காரணம், என் மனம், ஆன்மா பெங்களூருவில் உள்ளது. ஐபிஎல் போட்டியில் என் கடைசி நாள் வரை ஆர்சிபிக்காக மட்டுமே விளையாடுவேன்.
ஒரு விளையாட்டு வீரராக ஒரு விஷயத்துக்காகப் போராடும்போது இது மிகவும் முக்கியமான ஒன்று. மிகத் தீவிரமான உயர்தரமிக்க போட்டி... உலக கிரிக்கெட்டில் பெரும் மதிப்புமிக்க போட்டி. பெரிய போட்டிகளில், பெரிய தருணங்களில் வெல்ல வேண்டும் என நினைப்பவன் நான். இது கிடைக்காமல் இருந்தது. இன்று குழந்தையைப் போல தூங்குவேன்.
இத்தனை ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு முடிவு உள்ளது. நான் ஓய்வுபெறும்போது என்னால் முடிந்த அனைத்தையும் அர்ப்பணித்துள்ளேன் என்பதை நான் உணர வேண்டும். எனவே, முன்னேற்றம் காண எப்போது வழிகளைக் கண்டறிவேன். என்னால் இம்பாக்ட் வீரராக விளையாட முடியாது. 20 ஓவர்களையும் நான் உணர வேண்டும். களத்தில் தாக்கத்தை உண்டாக்க வேண்டும். அதுமாதிரியான வீரர் தான் நான். இந்தக் கோணத்தில் கடவுளின் ஆசியும் எனக்கு உள்ளது. திறமையும் இருக்கிறது. அணிக்கு உதவ வெவ்வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்த அணி நிர்வாகம், வீரர்கள் உண்மையில் அற்புதமானவர்கள். சரியான வீரர்கள், வெற்றியாளர்களைத் தேர்வு செய்தார்கள். ஏலத்தில் எங்களுடைய யுத்தியை பலர் கேள்விக்குள்ளாக்கினார்கள். ஆனால், ஏலத்துக்கு அடுத்த நாளிலிருந்து, கிடைத்த வீரர்கள் எண்ணி எங்களுக்கு மகிழ்ச்சியே. இந்த அணியில் நிறைய நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் அனைவருக்காகவும் நான் மிகப் பெரிய ஆதரவுக் குரலை எழுப்புகிறேன். அணியில், அணி நிர்வாகத்தில் என யார் இல்லாமலும் இது சாத்தியமில்லை. அணி நிர்வாகம் வீரர்களுக்கு ஆதரவாக இருந்து, நேர்மறையாகவே வைத்திருந்தது. எனவே, இது அனைவருக்குமானது. இந்த வெற்றி பெங்களூருக்கானது. வீரர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், ஒட்டுமொத்த அணி நிர்வாகம் என அனைவருக்குமானது இந்த வெற்றி" என்றார் விராட் கோலி.
ஐபிஎல் 2025 இறுதிச் சுற்றில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.