இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது குறித்த கேள்விக்கு இந்தியாவுக்கு எதிராக நிறைய முறை விளையாடி வருவதைக் காரணமாக குறிப்பிட்டுள்ளார் டிராவிஸ் ஹெட்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி டெஸ்ட் தொடரின் மூன்றாவது ஆட்டம் பிரிஸ்பேனிலுள்ள காபாவில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இரண்டாவது நாள் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இல்லை. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்துள்ளது.
டிராவிஸ் ஹெட் மீண்டும் சதமடித்தார். ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து ஃபார்முக்கு திரும்பினார். இந்தியாவில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் மற்ற பந்துவீச்சாளர்களிடமிருந்து உதவி இல்லை.
இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் டிராவிஸ் ஹெட்டிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.
"இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடுகிறோம். அவர்களுடையத் திட்டம் எனக்குப் பிடிபட்டதாக நினைக்கிறேன். இன்று நிறைய நல்ல திட்டங்களுடன் விளையாடியதாக நினைக்கிறேன். நிறைய நேரம் அழுத்தத்தை உணர்ந்தேன். நான் என்னுடைய ஆட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என நினைத்தேன்.
ஷார்ட் பந்து திட்டத்தைக் கடந்தேன். சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஜடேஜா சிறப்பாகவே தொடங்கினார். கூடுதல் பவுன்ஸ் கொஞ்சம் இருந்தது. அவருக்கு எதிராக சிறப்பாகத் தொடங்கியது நல்ல உணர்வைத் தருகிறது. இவற்றைச் சரியாகக் கடந்துவிட்டேன்.
இந்திய அணி இன்று நிறைய வெவ்வேறு திட்டங்களுடன் வந்தது. ஒரு பேட்டராக இந்தத் திட்டங்களைக் கடந்துச் செல்ல வேண்டும். இன்று சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி. ஆனால், அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் தொடக்கத்தில் இருந்துதான் நான் ஆரம்பிக்க வேண்டும்" என்றார் ஹெட்.
பும்ராவை எதிர்கொள்வது குறித்து பேசிய அவர், "அவரை எதிர்கொள்ளும் நிறைய முறை தொடக்கத்தில் அவர் ஸ்டம்புகளின் அடிபகுதியைக் குறிவைப்பது போல தோன்றும். என்னைப் பொறுத்தவரை, பந்துக்குச் சரியாக எதிர்வினையாற்ற வேண்டும். அவரால் வேகமாக பவுன்சர் வீச முடியும். ஸ்டம்புகளுக்கு முழு நீளத்தில் பந்துவீச முடியும். விக்கெட் வீழ்த்துவதற்கான அற்புதமான பந்துகளை வீசக்கூடியவர்.
இவருக்கு எதிராக நேர்மறையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருக்கும். அதற்காக அனைத்துப் பந்துகளிலும் ரன் எடுக்க வேண்டும் என்பது அவசியமல்ல. தடுப்பாட்டமோ, பந்தை விடுகிறேனோ எதுவாக இருந்தாலும் அதற்கான சரியான நிலையில் நான் இருக்கிறேனா என்பதுதான் முக்கியம்" என்றார் டிராவிஸ் ஹெட்.