டிஎன்பிஎல் ஏலத்தில் அதிக தொகைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர் என்ற புகழை வேகப்பந்துவீச்சாளர் முஹமது பெற்றுள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 2025 மெகா ஏலம் சென்னையில் நேற்று நடைபெற்றது. ஏலத்துக்கு முன்பு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியால் ஆர் அஸ்வின் மற்றும் வருண் சக்ரவர்த்தி தக்கவைக்கப்பட்டார்கள். லைக் கிங்ஸ் அணியால் ஷாருக் கான் மற்றும் சாய் சுதர்சன் தக்கவைக்கப்பட்டார்கள். திருப்பூர் தமிழன்ஸ் அணியால் கேப்டன் சாய் கிஷோர் தக்கவைக்கப்பட்டார்.
வேகப்பந்துவீச்சாளர் முஹமது ரூ. 18.8 லட்சத்துக்கு சேலம் ஸ்பார்டன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டவர் முஹமது.
ஆல்-ரௌண்டர் விஜய் ஷங்கர் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியால் ரூ. 18 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். முகிலேஷ் மற்றும் சுரேஷ் குமார் முறையே ரூ. 17.6 லட்சம் மற்றும் ரூ. 16.1 லட்சத்துக்கு திருச்சி அணியால் எடுக்கப்பட்டார்கள்.
ஹரி நிஷாந்த் ரூ. 12 லட்சத்துக்கு சேலம் அணியால் தேர்வு செய்யப்பட்டார். ஸ்வப்னில் சிங் ரூ. 10.8 லட்சத்துக்கு சேப்பாக் அணியால் எடுக்கப்பட்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் வீரர் கார்த்திக் மெய்யப்பன் தமிழ்நாடு திரும்பியுள்ளார். இவர் மதுரை பாந்தர்ஸ் அணியால் ரூ. 9.2 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆண்ட்ரே சித்தார்த் ரூ. 8.4 லட்சத்துக்கு கோவை கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் சுந்தர் ரூ. 6 லட்சத்துக்கு திருச்சி அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.