தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது ஆல்-ரௌண்டர் கமலினி மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 1.6 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம் பெங்களூருவில் இன்று பிற்பகல் 3 மணி முதல் நடைபெற்று வருகிறது. 5 அணிகளிலும் மொத்தம் 19 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பதால் மிகக் குறுகிய மினி ஏலமாக அமையவுள்ளது.
இந்த ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது ஆல்-ரௌண்டர் ஜி கமலினி மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 1.6 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடைய அடிப்படை விலை ரூ. 10 லட்சம்.
ஏலத்தில் தில்லி, மும்பை இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டார் கமாலினி.
யார் இந்த கமலினி?
19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் டி20 கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கமாலினி இரண்டாம் இடம். 8 ஆட்டங்களில் 311 ரன்கள் குவித்தார். சிக்ஸர் அடிப்பதில் வல்லமை படைத்துள்ள இவர் 10 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். கடந்த அக்டோபரில் தமிழ்நாடு கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.
19 வயதுக்குள்பட்டோருக்கான முத்தரப்புப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிச் சுற்றில் கமலினி 79 ரன்கள் விளாசினார். இதன் காரணமாக மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கமாலினி 29 பந்துகளில் 44 ரன்கள் விளாசியுள்ளார். பகுதி நேரமாக சுழற்பந்துவீசுவது கமலினியின் கூடுதல் பலம்.
இவர் தற்போது சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இளம் ஆல்-ரௌண்டர் மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
சூப்பர் கிங்ஸ் அகாடமி எக்ஸ் தளத்தில் கமலினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.