ஆஸ்திரேலிய ஏ அணியுடனான ஒருநாள் தொடருக்கு ரஜத் படிதார் மற்றும் திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய ஏ அணி வரும் செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவுக்குப் பயணம் செய்கிறது. லக்னௌவில் இந்திய ஏ அணிக்கு எதிராக இரு நான்கு நாள் ஆட்டங்கள் முறையே செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 23-ல் தொடங்கவுள்ளன. கான்பூரில் மூன்று ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் ஆட்டம் செப்டம்பர் 30-ல், இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 3-ல், மூன்றாவது ஆட்டம் அக்டோபர் 5-ல் நடைபெறவுள்ளது.
இதற்கான ஆஸ்திரேலிய ஏ அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நான்கு நாள் ஆட்டங்களுக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவித்தது.
இந்நிலையில், ரஜத் படிதார் மற்றும் திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் ரஜத் படிதார் அணியை வழிநடத்தவுள்ளார். அடுத்த இரு ஆட்டங்களில் திலக் வர்மா வழிநடத்தவுள்ளார். திலக் வர்மாவுக்குத் துணை கேப்டனாக படிதார் செயல்படுவார். ஆசியக் கோப்பைப் போட்டி முடிந்தபிறகு திலக் வர்மா, அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறார்கள். பிரியன்ஷ் ஆர்யா, சிமர்ஜீத் சிங் ஆகியோர் முதல் ஆட்டத்துக்குப் பிறகு விலகுகிறார்கள். தமிழக அணியின் வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் எல்லா ஆட்டங்களிலும் இடம்பெற்றுள்ளார்.
6 அடி 3 அங்குலம் உயரமுள்ள 26 வயது குர்ஜப்னீத் சிங், பஞ்சாபின் லுதியானாவில் பிறந்தவர். ஹரியாணாவில் வளர்ந்த குர்ஜப்னீத், 17 வயது முதல் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். கடந்த வருடம் தமிழக ரஞ்சி அணியில் இடம்பிடித்தார். இப்போது இந்திய ஏ அணி வரை வந்துவிட்டார்.
முதல் ஒருநாள் ஆட்டத்துக்கான இந்திய அணி
ரஜத் படிதார் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷ் ஷெட்கே, விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்நீத் சிங், யுத்விர் சிங், ரவி பிஸ்னாய், அபிஷேக் பொரெல் (விக்கெட் கீப்பர்), பிரியன்ஷ் ஆர்யா, சிமர்ஜீத் சிங்.
இரண்டாவது, மூன்றாவது ஒருநாள் ஆட்டத்துக்கான இந்திய அணி
திலக் வர்மா (கேப்டன்), ரஜத் படிதார் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷ் ஷெட்கே, விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்நீத் சிங், யுத்விர் சிங், ரவி பிஸ்னாய், அபிஷேக் பொரெல் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.
India A | Australia A | Rajat Patidar | Tilak Varma | Tilak Verma | BCCI | India A | India A Squad | Australia A Squad | Australia A |