ANI
விளையாட்டு

பாகிஸ்தான் மீண்டும் தோல்வி: ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா! | Asia Cup T20 | Team India |

ஒருமுறைகூட தோல்வியைச் சந்திக்காமல், பாகிஸ்தானை மூன்றாவது முறையாக வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது இந்தியா.

கிழக்கு நியூஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 9-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா.

ஆசியக் கோப்பை டி20 இறுதிச் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் துபாயில் ஞாயிற்றுக்கிழமை மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை.

முதல் மூன்று ஓவர்களில் பாகிஸ்தான் அணி மூன்று பவுண்டரிகள் அடித்தாலும் எடுத்த ரன்கள் 19 ஆகவே இருந்தது. பும்ரா வீசிய 4-வது ஓவரில் சஹிப்ஸதா ஃபர்ஹான் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஆட்டத்தின் போக்கை பாகிஸ்தான் பக்கம் இழுத்தார். ஷிவம் துபே இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக இருந்ததால், பவர்பிளேயில் வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்‌ஷர் படேல் பந்துவீசினார்கள். 6 ஓவர்களில் பாகிஸ்தான் அணி விக்கெட்டை இழக்காமல் 45 ரன்கள் எடுத்தது.

பவர்பிளே முடிந்தவுடன் குல்தீவ் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் ஓவர்களில் ஃபர்ஹான் மற்றும் ஃபகார் ஸமான் பவுண்டரியும் சிக்ஸர்களும் அடித்தார்கள். ஆட்டத்தில் பாகிஸ்தானின் கை ஓங்கியது. ஃபர்ஹான் இந்தியாவுக்கு எதிராக மீண்டும் ஓர் அரை சதம் அடித்தார். ஆனால், இம்முறை துப்பாக்கிக் கொண்டாட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.

வருண் சக்ரவர்த்தி ஓவரிலும் சிக்ஸர் அடித்து அதகளப்படுத்திய ஃபர்ஹான், அடுத்த பந்திலேயே 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு பாகிஸ்தான் 84 ரன்கள் சேர்த்தது.

ஆசியக் கோப்பைப் போட்டியில் நான்கு முறை டக் அவுட் ஆன சயிம் அயூப், ஷிவம் துபே ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை மேலும் உயர்த்தப் பார்த்தார். 12-வது ஓவரில் 100 ரன்களை தாண்டியது பாகிஸ்தான். முதலிரு ஓவர்களில் சுமாராகப் பந்துவீசிய குல்தீப் யாதவ், தனது மூன்றாவது ஓவரில் சிறப்பாகப் பந்துவீசி அயூப் விக்கெட்டை வீழ்த்தினார். முஹமது ஹாரிஸ் அக்‌ஷர் படேல் பந்தில் டக் அவுட் ஆனார்.

இதற்குப் பிறகு பாகிஸ்தான் பேட்டர்களுக்கு என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். களத்தில் நேரத்தைச் செலவிட்டு விளையாடி வந்த மூத்த வீரர் ஃபகார் ஸமான், வருண் சக்ரவர்த்தி சிக்ஸர் அடித்த பிறகு பொறுப்பான ஷாட்டை விளையாடியிருக்க வேண்டும். மீண்டும் தூக்கி அடிக்கப் பார்த்து 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

133 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது குல்தீப் யாதவ் 17-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் கேப்டன் சல்மான் அகா, 4-வது பந்தில் ஷஹீன் அஃப்ரிடி, கடைசி பந்தில் ஃபஹீம் அஷ்ரஃப் என ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கினார் குல்தீப் யாதவ். விளைவாக, 170 ரன்களை தொட்டிருக்க வேண்டிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் அக்‌ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

147 ரன்கள் எடுத்தால் ஆசியக் கோப்பை என்ற இலக்குடன் தொடக்க பேட்டர்கள் அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். முதல் ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி அடித்தாலும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சற்று சிறப்பாகவே பந்துவீசினார்கள். ஃபஹீம் அஷ்ரஃப் தனது முதல் பந்தை வேகம் குறைத்து வீச, வலையில் விழுந்து ஆட்டமிழந்தார் அபிஷேக் சர்மா. ஆடுகளத்தில் பந்து சற்று வேகம் குறைந்து வந்ததால், இந்திய பேட்டர்களும் டைமிங் கிடைக்காமல் திணறினார்கள். ஷஹீம் அஃப்ரிடி பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார்.

வேகம் குறைந்து வருவதை ஈடுகட்டும் வகையில் இறங்கி வந்து விளையாடிய கில் ஒரு பவுண்டரி அடித்தாலும், அஷ்ரஃபின் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் பேட்டிங்கில் பதற்றம் தெரிந்ததன் விளைவு 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இன்னிங்ஸை கட்டமைத்தார்கள். ஃபஹீம் அஷ்ரஃப் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் திலக் வர்மா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்ததால் 6 ஓவர்களில் இந்தியா 36 ரன்கள் எடுத்தது. சுழற்பந்துவீச்சாளர்கள் ஓவர்களில் பெரியளவில் பவுண்டரிகள் இல்லை. 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 58 ரன்கள் எடுத்தது.

அப்ரார் அஹமது மற்றும் சயிம் அயூப் ஓவரில் முறையே திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தலா ஒரு சிக்ஸர் அடித்தார்கள். அப்ரார் அஹமது ஓவரில் அடுத்த சிக்ஸர் அடிக்கப் பார்த்து சஞ்சு சாம்சன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

6 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 64 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இருந்தது. ஹாரிஸ் ராஃப் 15-வது ஓவரை வீசினார். துபே பவுண்டரி அடித்து ஓவரை தொடக்கி வைக்க, திலக் வர்மா மேலும் ஒரு பவுண்டரி அடித்து சிக்ஸருடன் ஓவரை நிறைவு செய்தார். கடைசி 5 ஓவர்களில் 47 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டம் வந்தது.

அப்ரார் அஹமது ஓவரில் ஷிவம் துபேவும் ஒரு சிக்ஸர் அடித்தார். ஷஹீன் அஃப்ரிடி 17-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்ததால், கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டம் வந்தது. திலக் வர்மாவும் 41 பந்துகளில் அரை சதம் அடித்து ஆட்டத்தை முடித்துக்கொடுக்கத் தயாரானார்.

இன்றைய நாளில் மோசமாகப் பந்துவீசி வந்த ஹாரிஸ் ராஃப் 18-வது ஓவரின் கடைசி பந்தை ஃபுல்டாஸாக வீச, ஷுவம் துபே சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டன. இன்றைய ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசிய ஃபஹீம் அஷ்ரஃப் 19-வது ஓவரில் ஒரு பவுண்டரி உள்பட 7 ரன்கள் மட்டுமே கொடுத்து துபே விக்கெட்டையும் வீழ்த்தினார். துபே 22 பந்துகளை எதிர்கொண்டு முக்கியமான 33 ரன்களை எடுத்தார்.

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் திலக் வர்மா இருந்தார். ஓவரை வீசியது ஹாரிஸ் ராஃப். பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், கூடுதலாக ஒரு ஃபீல்டர் வட்டத்துக்குள் இருக்க நேரிட்டது இந்தியாவுக்குச் சாதகமானது.

இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து பாகிஸ்தானிடம் வெற்றியைப் பறித்தார் திலக் வர்மா. 4-வது பந்தில் பவுண்டரி அடித்து ரிங்கு சிங் வெற்றியை உறுதி செய்தார். ஆசியக் கோப்பையில் ரிங்கு சிங் எதிர்கொண்ட முதல் பந்து இது.

19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. திலக் வர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 9-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது இந்தியா.

Asia Cup T20 | Asia Cup | Asia Cup 2025 | Ind v Pak | India v Pakistan | Tilak Verma | Tilak Varma | Kuldeep Yadav | Varun Chakaravarthy | Varun Chakravarthy | Shivam Dube | Faheem Ashraf | Rinku Singh |