ANI
விளையாட்டு

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு என்ன பேசினார் விராட் கோலி?

கிழக்கு நியூஸ்

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி இறுதிச் சுற்று ஆட்ட நாயகனாகவும், பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.

ஆட்ட நாயகன் விருதை வென்ற கோலி கூறியதாவது:

"இதுவே என் கடைசி டி20 உலகக் கோப்பை. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்காக இருந்தது. ரன்கள் வரவில்லை என்ற நினைக்கலாம். ஆனால், அதன்பிறகு காலம் மாறும். கடவுள் அற்புதமானவர். அணிக்கு எப்போது தேவையோ அப்போது என்னுடையப் பணியைச் செய்து முடித்துள்ளேன்.

இந்தியாவுக்காக எனது கடைசி டி20 ஆட்டம் இது. இந்தக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினோம். வென்றுவிட்டோம்.

ஓய்வு முடிவு என்பது வெளிப்படையான ரகசியம்தான். தோல்வியடைந்திருந்தாலும், இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பேன். டி20 கிரிக்கெட்டை அடுத்தத் தலைமுறை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரமிது.

ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் காத்திருப்பு. ரோஹித் சர்மாவுக்கு இது 9-வது டி20 உலகக் கோப்பை. எனக்கு இது 6-வது டி20 உலகக் கோப்பை. இந்த உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மா தகுதியானவர்" என்றார் விராட் கோலி.

இந்தியாவுக்காக 125 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள கோலி, 48.69 சராசரியில் 137.04 ஸ்டிரைக் ரேட்டில் 4,188 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம், 38 அரை சதங்கள் அடித்துள்ளார்.