ஹர்மன்பிரீத் கௌர் 
விளையாட்டு

இதுவரை இப்படி ஒரு சிறந்த அணியுடன் சென்றதில்லை: டி20 உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பிரீத் கௌர்

யோகேஷ் குமார்

எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களின் கடமை என்ன, என்பது குறித்து நன்றாகவே தெரியும் என ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை வருகிற அக்டோபர் 3 அன்று தொடங்கி அக்டோபர் 20 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்டோபர் 4 அன்று விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி வீராங்கனைகள் நேற்று துபாய் புறப்பட்டனர். அதற்கு முன்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், “இதுவரை இப்படி ஒரு சிறந்த அணியுடன் டி20 உலகக் கோப்பைக்கு சென்றதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஹர்மன்பிரீத் கௌர் பேசியதாவது

“எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீராங்கனைகளுக்கு அதிக அனுபவம் உண்டு. அதனால் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கடமை என்ன என்பது குறித்து நன்றாகவே தெரியும். நாங்கள் இதுவரை இப்படி ஒரு சிறந்த அணியுடன் டி20 உலகக் கோப்பைக்கு சென்றதில்லை.

அனைவரும் தங்களின் வேலையைச் சிறப்பாக செய்து வருகின்றனர். எங்கள் அணியை மற்ற அணியுடன் ஒப்பிட முடியாது. ஒவ்வொரு அணியின் பலமும், பலவீனமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும். ஆனால் எங்கள் அணி மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது, அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதும் எனக்கு தெரியும்.

கடந்த மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஒரு ஆட்டம் மட்டும் நாங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. ஆனால், அப்போது என்ன தவறுகள் செய்தோமோ அது குறித்து விவாதித்தோம். இதுபோன்ற சூழலை வருங்காலத்தில் எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் கலந்துரையாடினோம்.

நான் உலகக் கோப்பையில் பலமுறை விளையாடியிருக்கிறேன். அங்கு கிடைக்கும் அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. என்னுடைய 19 வயதில் என்ன மனநிலையுடன் உலகக் கோப்பையில் விளையாடினேனோ, அதே மனநிலையுடன் விளையாடப் போகிறேன். உலகக் கோப்பை என்பதால் அழுத்தம் அதிகமாக இருக்கும், இருப்பினும் முடிவுகளைப் பற்றி சிந்திகாமல் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அவ்வாறு விளையாடும் பட்சத்தில் என்னால் பல விஷயங்களை மாற்றமுடியும்”.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.