விளையாட்டு

யார் இந்த மிதுன் மனாஸ்? | Mithun Manhas | BCCI President |

இந்திய அணிக்காக அறிமுகமாகாமல் பிசிசிஐ தலைவராகும் முதல் நபர் என்ற பெருமையைப் பெறுகிறார் மிதுன் மனாஸ்.

கிழக்கு நியூஸ்

பிசிசிஐ தலைவர் பதவிக்கு செப்டம்பர் 28 அன்று நடைபெறும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது. தில்லி முன்னாள் கேப்டன் மிதுன் மனாஸ் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், அவர் போட்டியின்றித் தேர்வாகவுள்ளார்.

இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாமல் பிசிசிஐ தலைவராகும் முதல் நபர் எனும் பெருமையைப் பெறுகிறார். மேலும், ஜம்மு-காஷ்மீரிலிருந்து வந்த ஒருவர் பிசிசிஐ தலைவராவது இதுவே முதன்முறை என்ற பெருமையையும் மிதுன் மனாஸ் பெறுகிறார்.

இவர் ஜம்மு-காஷ்மீரில் பிறந்தவர். யு-16 கிரிக்கெட்டை ஜம்மு-காஷ்மீருக்காக விளையாடிய மிதுன் மனாஸ், அதன்பிறகு தில்லிக்கு மாறினார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் 1997-98-ல் அறிமுகமானார். 2007-08 ரஞ்சி கோப்பையில் தில்லியை மூன்று ஆட்டங்களில் வழிநடத்திய மிதுன் மனாஸ், அந்த அணி கோப்பையை வெல்ல உதவினார். தில்லி வென்ற அந்த ரஞ்சி கோப்பை பருவத்தில் மிதுன் மனாஸ் 921 ரன்கள் குவித்தார். 2015-ல் தில்லியிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு மாறினார். அடுத்த ஆண்டிலேயே ஓய்வும் பெற்றார்.

157 முதல் தர ஆட்டங்களில் 45.82 சராசரியில் 27 சதங்கள் உள்பட 9,714 ரன்கள் எடுத்துள்ளார் மிதுன் மனாஸ். நடுவரிசை பேட்டர் என்பதாலே இவருக்கு இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது. மிதுன் மனாஸ் உள்நாட்டில் ரன்களை குவித்து வந்த காலத்தில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, லக்‌ஷமன் ஆகியோர் இந்திய அணியின் நடுவரிசையில் நங்கூரமிட்டிருந்தார்கள். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 45.84 சராசரியில் 4,126 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் தில்லி டேர்டெவில்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), புனே வாரியர்ஸ் இந்தியா, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 19 வயதுக்குள்பட்ட வங்கதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக இருந்துள்ளார். ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகளுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளார். ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தை நிர்வகிப்பதில் மிதுன் மனாஸ் முக்கியப் பங்காற்றி வருகிறார். இவர் அக்டோபரில் 46 வயதை அடைகிறார்.

பிசிசிஐ-யின் 36-வது தலைவராக ரோஜர் பின்னி அக்டோபர் 2022-ல் பொறுப்பேற்றுக் கொண்டார். 70 வயதைப் பூர்த்தி செய்ததால், செப்டம்பர் தொடக்கத்தில் பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். பிசிசிஐ விதிப்படி ஒருவர் 70 வயதை அடைந்தவுடன், அவர் பதவி விலகிக்கொள்ள வேண்டும். 70 வயதுக்கு மேல் எவ்விதப் பதவியையும் வகிக்கக் கூடாது. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இடைக்காலமாகத் தலைவர் பதவியை வகித்து வருகிறார்.

Mithun Manhas | BCCI President |