ANI
விளையாட்டு

ஒரு டெஸ்டும் ஓராயிரச் சாதனையும்!

இந்திய அணி டெஸ்டில் முதன்முறையாக 1,000 ரன்கள் எடுத்துள்ளது. அதுமட்டுமா...

கிழக்கு நியூஸ்

ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த ஷுப்மன் கில், ஒரு டெஸ்டில் இந்திய அணி 1,000 ரன்கள் எடுத்தது முதன்முறை என இந்திய அணி ஏராளமான சாதனைகளை முறியடித்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் தலைமைப் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லமும் பொறுப்பேற்ற பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் இங்கிலாந்தின் யுத்தி மாறியது.

  • ஆடுகளங்களை பந்துவீச்சாளர்களுக்கு உதவி இல்லாமல் செய்வது...

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானத்தைக் காட்டாமல் ஒருநாள் ஆட்டம்போல் விளையாடுவது, தேவைப்பட்டால் டி20 போல விளையாடுவது..

  • பிறகு டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்து நான்காவது இன்னிங்ஸில் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தாமல் வெற்றியை நோக்கி நகர்வது...

இந்த யுத்தி இங்கிலாந்துக்கு கடந்த காலங்களில் ஓரளவுக்குப் பலனைக் கொடுத்தாலும், பிர்மிங்ஹமில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் அதுவே இங்கிலாந்துக்கு எதிரியாக மாறியுள்ளது.

பேட்டிங் சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்டர்கள் ரன் மழையைப் பொழிந்துள்ளார்கள். முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களும் எடுத்து கம்பீரமான நிலையில் இந்தியா உள்ளது. இந்திய கேப்டன் ஷுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் குவித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் இத்தகைய ஆட்டத்தால், பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

ஷுப்மன் கில் 430 ரன்கள்

முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதமடித்து 269 ரன்கள் குவித்த ஷுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் விளாசினார். இதன்மூலம், இந்த டெஸ்டில் கில் எடுத்த ரன்கள் 430.

ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் கிரஹம் கூச்சுக்கு அடுத்த இடத்தில் ஷுப்மன் கில் உள்ளார்.

கிரஹம் கூச் 1990-ல் இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸில் 456 ரன்கள் எடுத்ததே இன்றும் சாதனையாக உள்ளது.

ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்

  • 456 ரன்கள் - கிரஹம் கூச் vs இந்தியா, லார்ட்ஸ் 1990

  • 430 ரன்கள் - ஷுப்மன் கில் vs இங்கிலாந்து, பிர்மிங்ஹம் 2025

  • 426 ரன்கள் - மார்க் டெய்லர் vs பாகிஸ்தான், பெஷாவர் 1998

  • 424 ரன்கள் - குமார் சங்கக்காரா vs வங்கதேசம், சட்டோகிராம் 2014

  • 400 ரன்கள் - பிரையன் லாரா vs இங்கிலாந்து, செயிண்ட் ஜான்ஸ் 2004

ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்களில் சுனில் காவஸ்கர் சாதனையை முறியடித்து ஷுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார்.

சுனில் காவஸ்கர் 1971-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 344 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்கள்

  • ஷுப்மன் கில் - 430 ரன்கள் (எதிரணி: இங்கிலாந்து, 2025)

  • சுனில் காவஸ்கர் - 344 ரன்கள் (எதிரணி: மேற்கிந்தியத் தீவுகள், 1971)

  • விவிஎஸ் லக்‌ஷ்மன் - 340 ரன்கள் (எதிரணி: ஆஸ்திரேலியா, 2001)

  • சௌரவ் கங்குலி - 330 ரன்கள் (எதிரணி: பாகிஸ்தான், 2007)

  • விரேந்தர் சேவாக் - 319 ரன்கள் (எதிரணி: தென்னாப்பிரிக்கா, 2008)

இரு இன்னிங்ஸிலும் 150+ ரன்கள்

ஒரு டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 150 அல்லது அதற்கு மேல் ரன்கள் அடித்த வீரர்களில் ஆலன் பார்டருக்கு அடுத்து ஷுப்மன் கில் தான்.

  • ஆலன் பார்டர் - 150* மற்றும் 153 (எதிரணி: பாகிஸ்தான்; லாகூர், 1980)

  • ஷுப்மன் கில் - 269 மற்றும் 161 (எதிரணி: இங்கிலாந்து; பிர்மிங்ஹம், 2025)

இரு இன்னிங்ஸிலும் சதமடித்த இந்திய கேப்டன்கள்

ஒரு டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் சதமடித்த இந்திய கேப்டன்களில் சுனில் காவஸ்கர், விராட் கோலி வரிசையில் ஷுப்மன் கில் இடம்பிடித்துள்ளார்.

  • சுனில் காவஸ்கர் - 107 மற்றும் 182* (எதிரணி: மேற்கிந்தியத் தீவுகள்; கொல்கத்தா, 1978)

  • விராட் கோலி - 115 மற்றும் 141 (எதிரணி: ஆஸ்திரேலியா; அடிலெய்ட், 2014)

  • ஷுப்மன் கில் - 269 மற்றும் 161 (எதிரணி: இங்கிலாந்து; பிர்மிங்ஹம், 2025)

ஒரு டெஸ்டில் இரட்டைச் சதம் மற்றும் சதமடித்த வீரர்கள்

ஒரு டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் சதமடித்து மற்றொரு இரட்டைச் சதமடித்த வீரர்களில் ஷுப்மன் கில் 9-வது வீரராக இணைந்துள்ளார்.

ஷுப்மன் கில்லுக்கு முன்

  1. கெவின் வால்டர்ஸ் - 242 மற்றும் 103

  2. சுனில் காவஸ்கர் - 124 மற்றும் 220

  3. லாரன்ஸ் ரோவ் - 214 மற்றும் 100*

  4. கிரேக் சேப்பல் - 247* மற்றும் 133

  5. கிரஹம் கூச் - 333 மற்றும் 123

  6. பிரையன் லாரா - 221 மற்றும் 130

  7. குமார் சங்கக்காரா - 319 மற்றும் 105

  8. மார்னஸ் லபுஷேன் - 204 மற்றும் 104*

ஒரு டெஸ்டில் 1,000 ரன்கள்

இந்திய அணி முதன்முறையாக ஒரு டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் எடுத்த ரன்களை சேர்த்து மொத்தம் 1,000 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்பு 2004-ல் சிட்னியில் 916 ரன்கள் எடுத்ததே இந்திய அணியின் அதிகபட்சமாக இருந்தது.

  • 1014 ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக... (பிர்மிங்ஹம், 2025)

  • 916 ரன்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக... (சிட்னி, 2004)

டெஸ்டில் ஓர் அணி மொத்தம் 1,000 ரன்கள் எடுப்பது இது 6-வது முறை. அதிக ரன்கள் எடுத்ததில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

  • இங்கிலாந்து - 1,121 ரன்கள் (எதிரணி: மேற்கிந்தியத் தீவுகள், 1930)

  • பாகிஸ்தான் - 1078 ரன்கள் (எதிரணி: இந்தியா, 2006)

  • ஆஸ்திரேலியா - 1028 ரன்கள் (எதிரணி: இங்கிலாந்து, 1934)

  • இந்தியா - 1014 ரன்கள் (எதிரணி: இங்கிலாந்து, 2025)

  • ஆஸ்திரேலியா - 1013 ரன்கள் (எதிரணி: மேற்கிந்தியத் தீவுகள், 1969)

  • தென்னாப்பிரிக்கா - 1011 ரன்கள் (எதிரணி: இங்கிலாந்து, 1939)