ANI
விளையாட்டு

இந்திய அணியில் அஸ்வினுக்குப் பதில் தனுஷ் கோடியான் தேர்வு

பிஜிடி தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்தியா ஏ அணியில் தனுஷ் கோடியான் இடம்பெற்றிருந்தார்.

கிழக்கு நியூஸ்

பிஜிடி தொடருக்கான இந்திய அணியில் மும்பை ஆல்-ரவுண்டர் தனுஷ் கோடியான் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று டெஸ்டுகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் டிரா ஆனது.

பிரிஸ்பேன் டெஸ்ட் முடிவடைந்ததும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். கடைசி இரு டெஸ்டுகள் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறுவதால், சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்குப் பதில் மாற்று வீரராக அறிமுக வீரர் தனுஷ் கோடியான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் அஸ்வினைப் போல ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர், வலது கை பேட்டர். இவர் விரைவில் இந்திய அணியுடன் மெல்போர்னில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஜிடி தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்தியா ஏ அணியில் தனுஷ் கோடியான் இடம்பெற்றிருந்தார்.

முதல் தர கிரிக்கெட்டில் 59 இன்னிங்ஸில் 25.7 சராசரியில் 46.4 ஸ்டிரைக் ரேட்டுடன் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 47 இன்னிங்ஸில் இரு சதங்கள் உள்பட 41.21 சராசரியில் 1,525 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியப் பயணத்தின்போது, இந்தியா ஏ அணிக்காக ஒரு டெஸ்டில் விளையாடிய தனுஷ் கோடியான் பேட்டிங்கில் 0 (4) மற்றும் 44 (84) எடுத்தார்கள். பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 8 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காத கோடியான், இரண்டாவது இன்னிங்ஸில் 12.5 ஓவர்களில் 62 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.