உனத்கட் 
விளையாட்டு

சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்ட தமிழ்நாடு மைதானங்கள்: உனாட்கட் பாராட்டு

ஒவ்வொரு சங்கமும் இதனை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

யோகேஷ் குமார்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தைப் பாராட்டி சௌராஷ்டிரம் அணியின் கேப்டன் உனாட்கட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சௌராஷ்டிரம் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோவையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 3-வது நாள் மாலையில் பலத்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மைதான ஊழியர்களின் கடின உழைப்பால், அடுத்த நாள் ஆட்டம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கியது.

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இந்த செயலைப் பாராட்டி சௌராஷ்டிரம் அணியின் கேப்டன் உனத்கட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உனாட்கட்டின் எக்ஸ் பதிவு

“அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஏற்றவாறு, சிறந்த உட்கட்டமைப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது.

கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி சாம்பியன் கிரிக்கெட் வீரர்களின் தாயகமாக தமிழ்நாடு இருப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

இந்த ஆட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்திருந்தாலும், 3-வது நாள் மாலையில் பலத்த மழை பெய்த பிறகு 4-வது நாள் காலையில் சரியாக 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்க மைதான ஊழியர்கள் செய்த செயல் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

ஒரு சாம்பியன் அணியாக இருப்பதற்கு நல்ல வீரர்களைக் கடந்து சில விஷயங்கள் தேவை. ஒவ்வொரு சங்கமும் இதனை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.