டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்று @icc
விளையாட்டு

கபில், தோனி வரிசையில் இணைவாரா ரோஹித் சர்மா?

இந்திய அணியின் 11 வருட ஐசிசி கோப்பை கனவு நிறைவேறுமா?

யோகேஷ் குமார்

டி20 உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடவுள்ளன.

இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளுமே ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியைச் சந்திக்கவில்லை. இந்திய அணி லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்க ஆகிய அணிகளையும், சூப்பர் 8-ல் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலிய அணிகளையும் வென்றது.

அரையிறுதியில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி.

தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகளையும் சூப்பர் 8-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, மே.இ. தீவுகள் ஆகிய அணிகளையும் வென்றது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்களுக்குச் சுருட்டி மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இரு அணிகளும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளன. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்த செயல்பாட்டை அளித்துள்ளன.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை கோலியின் ஃபார்ம் மட்டுமே கவலை அளிக்கிறது. மற்றபடி ரோஹித், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா என அனைவரும் சிறப்பாக விளையாடி உள்ளனர். ரோஹித் சர்மா 7 ஆட்டங்களில் 248 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்களான ஜடேஜா, அக்‌ஷர் படேல், பாண்டியாவும் தங்களது வேலையை சிறப்பாக செய்து வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், அரையிறுதியிலும் அக்‌ஷர் படேல் பந்துவீச்சு, ஃபீல்டிங் என இரண்டிலும் அசத்தினார்.

இந்திய அணிக்கு பெரிய பலமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான். அர்ஷ்தீப் சிங் 7 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். பும்ரா 7 ஆட்டங்களில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் தொடக்க வீரர் டி காக் 8 ஆட்டங்களில் 204 ரன்களை எடுத்துள்ளார். மிடில் ஆர்டரில் மார்க்ரம், ஸ்டப்ஸ், கிளாசன், மில்லர் ஆகிய அனைவரும் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப விளையாடி வருகின்றனர்.

தென்னாப்பிரிக்கா அணிக்கும் பந்துவீச்சு பலமாக உள்ளது. ஷம்சி 4 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி 11 விகெக்ட்டுகளை வீழ்த்தியுள்ளார், மஹாராஜ் விக்கெட்டுகள் அதிகமாக எடுக்கவில்லை என்றாலும் ரன்களை கட்டுப்படுத்தி உள்ளார்.

வேகப்பந்தில் நார்க்கியா 13 விக்கெட்டுகளும், ரபாடா 12 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

எனவே, அனைத்து வகையிலும் இரு அணிகளும் சிறந்து விளங்குகின்றன. இந்திய அணி கடைசியாக 2007-ல் டி20 உலகக் கோப்பையை வென்றது. தென்னாப்பிரிக்க அணி முதல்முறையாக இறுதிச் சுற்றில் விளையாடவுள்ளது.

இந்திய அணி கடைசியாக 2013-ல் ஐசிசி கோப்பையை வென்றது. எனவே இந்திய அணியின் 11 வருட ஐசிசி கோப்பை கனவு நிறைவேறுமா? உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்களான கபில் தேவ், தோனி வரிசையில் ரோஹித் இணைவாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.