ரோஹித் சர்மா ANI
விளையாட்டு

மற்ற ஆட்டங்களைப் போல இதுவும் ஒரு சாதாரண ஆட்டம்தான்: அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா

"ஒவ்வொரு வீரரும் தங்களின் வேலையைச் சரியாகச் செய்தால் போதுமானது".

யோகேஷ் குமார்

அரையிறுதி ஆட்டம் என்பதால் அதனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டாம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெற உள்ளது.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா, “ஆஸ்திரேலிய அணி இனி இந்த உலகக் கோப்பையில் விளையாடாதது ஒரு நல்ல விஷயம்” என்றார்.

அவர் பேசியதாவது:

“இதற்கு முன்பு நடந்ததைப் பற்றி யோசிக்க வேண்டாம் என நினைக்கிறேன். அரையிறுதி ஆட்டம் என்பதால் அதனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டாம். மற்ற ஆட்டங்களைப் போல இதுவும் ஒரு சாதாரண ஆட்டம்தான். எனவே அதிகம் யோசிக்க விரும்பவில்லை. சில நேரங்களில் அதிகம் யோசித்தால், முடிவுகளை எடுக்கமுடியாது. எனவே மனநிலையை அமைதியாக வைப்பது அவசியம்.

ஒவ்வொரு வீரரும் தங்களின் வேலையைச் சரியாகச் செய்தால் போதுமானது. ஆடுகளங்களைக் குறித்து பேசி பேசி சலிப்பாக உள்ளது. நிறைய வித்தியாசமான சூழலில் விளையாடி உள்ளோம். எனவே சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் அனுபவம் ஒவ்வொரு வீரருக்கும் உண்டு. பயமின்றி விளையாடுவது அவசியம்.

ஒரு ஆட்டத்தில் 80-90 ரன்களை அடித்த வீரர்களைப் பற்றி மட்டும் பேசக்கூடாது, சில ஆட்டங்களில் வீரர்களால் எடுக்கப்படும் 20-30 ரன்களும் முக்கியம்தான். அனைவரும் அணியின் வெற்றிக்காகவே விளையாட வேண்டும், தனிப்பட்ட சாதனைகளைப் பற்றி கவலைப்பட கூடாது. இதுதான் வீரர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை. ஆஸ்திரேலிய அணி இனி இந்த உலகக் கோப்பையில் விளையாடாதது ஒரு நல்ல விஷயம்” என்றார்.