நமீபியா வெற்றி! @StarSportsIndia
விளையாட்டு

டி20 உலகக் கோப்பையில் சூப்பர் ஓவர்: நமீபியா வெற்றி!

யோகேஷ் குமார்

ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் நமீபிய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் நமீபியா - ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஓமன் அணியில் காலித் கெயில் தவிர வேறு யாரும் பெரிதாக ரன்களை அடிக்கவில்லை. 19.4 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. காலித் 39 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்தார். அசத்தலாக பந்துவீசிய நமீபிய அணியில் ட்ரம்பெல்மேன் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வீஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய நமீபிய அணிக்கும் பேட்டிங் சரியாக அமையவில்லை. ஓமன் அணி முதல் இன்னிங்ஸில் சொதப்பினாலும், பந்துவீச்சில் மிரட்டியது. கடைசி வரை போராடிய நமீபிய அணியால் 20 ஓவர்கள் முடிவில் 109 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்த நிலையில் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. நமீபிய அணியில் ஃபிரைலின்க் அதிகபட்சமாக 48 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். ஓமன் அணியில் பந்துவீசிய 7 பேரும் சிறப்பாக செயல்பட்டனர். அதிகபட்சமாக மேஹரான் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பிறகு சூப்பர் ஓவர் தொடங்கியது. டி20 உலகக் கோப்பையில் நடைபெறும் 3-வது சூப்பர் ஓவர் இதுவாகும். முன்னதாக 2012 டி20 உலகக் கோப்பையில் இருமுறை சூப்பர் ஓவர் நடைபெற்றது.

முதலில் விளையாடிய நமீபிய அணி 21 ரன்களை எடுத்தது. இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சூப்பர் ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதன் பிறகு விளையாடிய ஓமன் அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நமீபிய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய டேவிட் வீஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.