தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு பிரச்னை ANI
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: தெ.ஆ. அணியில் எழுந்துள்ள இடஒதுக்கீட்டுப் பிரச்னை!

யோகேஷ் குமார்

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் ஒரு கருப்பு இனத்தவர் மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 2 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்க அணி மார்க்ரம் தலைமையில் களமிறங்குகிறது. தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை அறிவிக்கப்படும் 15 பேரில் 5 பேர் - வெள்ளையரும், மீதமுள்ள 6 பேர் - கலப்பு இனத்தவர் மற்றும் கருப்பு இனத்தவர்களும் இடம்பெற வேண்டும். இந்த 6 பேரில் இரு இடங்கள் கருப்பு இனத்தவர்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா மட்டுமே ஒரே ஒரு கருப்பு இனத்தவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கருப்பு இனத்தவரான இங்கிடி மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விதிப்படி 15 பேரில் இரண்டு கருப்பு இனத்தவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு கருப்பு இனத்தவர் மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும் அணி அறிவிக்கப்பட்டபோது இதுகுறித்துப் பேசிய தெ.ஆ. அணியின் வெள்ளைப் பந்து பயிற்சியாளர் ராப் வால்டர், அணியின் வெற்றிக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தியதாகக் கூறினார். திறமையான கருப்பு இன வீரர்களைத் தேர்வு செய்வதில் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதிருந்தே இதில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையின்போது இந்நிலைமை மாற வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.