ANI
விளையாட்டு

இந்தியா டி20 உலகக் கோப்பை சாம்பியன்!

இந்தியா 13 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றுள்ளது...

யோகேஷ் குமார்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிச் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

டி20 உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பார்படோஸில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இரு அணிகளுமே அரையிறுதியில் விளையாடிய அதே 11 வீரர்களுடன் களமிறங்கின.

முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகளுடன் அதிரடியான தொடக்கத்தை அளித்தார் கோலி. மறுமுனையில் ரோஹித் சர்மாவும் இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினாலும் அவரின் அதிரடியான ஆட்டம் அதிகநேரம் நீடிக்கவில்லை. 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து மஹாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா.

இதைத் தொடர்ந்து ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் அதே ஓவரில் வெளியேறினார். 2 ஓவர்களில் 23 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. இதன் பிறகு சூர்யகுமார் யாதவ் ரபாடா பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்தபோது ஆட்டமிழந்தார். 3 ரன்களில் அவர் வெளியேற 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

பவர்பிளே முடிவில் 45 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து அக்‌ஷர் படேல் களமிறங்கியதில் இருந்தே அதிரடியாக விளையாடினார். நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு நல்ல கூட்டணி அமைந்தது. கோலி - அக்‌ஷரின் ஜோடி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் வந்தது.

இருவரும் சூழலை அறிந்து சிறப்பாக விளையாடி 50 ரன்களை சேர்த்தனர். குறிப்பாக சிக்ஸர்களாக பறக்கவிட்டு தெ.ஆ. அணியை பதறவைத்தார் அக்‌ஷர் படேல். 13.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது இந்தியா. இதைத் தொடர்ந்து எதிர்பாராத வகையில் டி காக்கின் சிறப்பான த்ரோவால் ரன் அவுட் ஆகி வெளியேறினார் அக்‌ஷர் படேல். 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது.

இதன் பிறகு களமிறங்கிய துபேவும் சிக்ஸர், பவுண்டரி என அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கினார். இந்திய அணி 16 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்தது. நிதானமாக விளையாடிய கோலி 48 பந்துகளில் அரை சதம் அடித்தார். இப்போட்டியில் கோலியின் முதல் அரை சதம் இது. தொடர்ந்து அவர் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது.

2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து யான்சென் பந்தில் வெளியேறினார் கோலி. ரோஹித் சொன்னதைப் போல அனைத்து திறமையையும் சேர்த்து வைத்து இறுதிச் சுற்றில் தன்னை நிரூபித்தார் கோலி.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய துபே 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது.

தெ.ஆ. அணியில் அதிகபட்சமாக நார்க்கியா, மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு விளையாடிய தெ.ஆ. அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. பும்ராவின் அசத்தலான பந்தில் ஹென்ட்ரிக்ஸும், அர்ஷ்தீப் சிங்கின் பந்தில் மார்க்ரமும் அடுத்தடுத்து வெளியேறினர்.

டி காக் - ஸ்டப்ஸ் ஆகியோர் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடினர். பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்தது தெ.ஆ. அணி. சுழற்பந்து வீச்சால் கட்டுப்படுத்த நினைத்தாலும், இருவரும் அதிரடியாக விளையாடி 50 ரன்களை சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த ஜோடியை அக்‌ஷர் படேல் பிரித்தார். ஸ்டப்ஸ் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் வந்தது. 60 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்பட்டது.

கிளாசெனின் சிறப்பான ஆட்டத்தால் 11.3 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது தெ.ஆ. அணி. 13-வது ஓவரில் மீண்டும் பந்துவீச வந்தார் அர்ஷ்தீப் சிங். அதே ஓவரில் இந்திய அணிக்கு விக்கெட்டும் கிடைத்தது. டி காக் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு மில்லர் களமிறங்கினார்.

7 ஓவர்களில் 68 ரன்கள் தேவைப்பட்டது. அக்‌ஷர் படேலின் ஒரே ஓவரில் 24 ரன்களை எடுத்தது தெ.ஆ. அணி. கிளாசென் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என விரட்டி அடுத்த ஓவரில் அரை சதத்தையும் அடித்தார். பும்ராவின் ஓவரில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்ற எதிர்பார்பில் இந்திய ரசிகர்கள் காத்திருந்தனர். 16-வது ஓவரில் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார் பும்ரா, ஆனால் விக்கெட் எதுவும் வரவில்லை.

அடுத்ததாக வந்த ஹார்திக் பாண்டியா கிளாசெனை வெளியேற்றினார். 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு மீண்டும் ஆட்டம் மாறியது.

3 ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை வீசிய பும்ரா எதிர்பார்தது போல விக்கெட்டை வீழ்த்தினார். யான்சென் 2 ரன்களில் வெளியேற அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே வந்தது. 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசி 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. மில்லர் களத்தில் இருந்தார். முதல் பந்தில் சிக்ஸரை நோக்கி அடிக்க பவுண்டரி எல்லையில் சிறப்பான கேட்சை பிடித்தார் சூர்யகுமார் யாதவ். நடப்பு உலகக் கோப்பையின் சிறந்த கேட்ச் என்றே கூறலாம். 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் மில்லர்.

5 பந்துகளில் 16 ரன்கள். முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் ரபாடா. 4 பந்துகளில் 12 ரன்கள். அடுத்த 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுக்க, 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. சிக்ஸர் அடிக்க முயற்சித்த ரபாடா ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை சிறப்பாக வீசிய ஹார்திக் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். முடிவில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 17 வருட டி20 உலகக் கோப்பை ஏக்கத்தை நிறைவேற்றியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் கபில் தேவ், தோனிக்கு பிறகு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எனும் பெருமையைப் பெற்றார் ரோஹித் சர்மா.