நெட்ரவால்கர்  @icc
விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்திய தனது ஊழியருக்கு வாழ்த்து தெரிவித்த ஆரகிள் நிறுவனம்!

யோகேஷ் குமார்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய நெட்ரவால்கருக்கு அவர் பணிபுரியும் ஆரகிள் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அமெரிக்க வீரரான நெட்ரவால்கர் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல சூப்பர் ஓவரையும் சிறப்பாக வீசி அமெரிக்க அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார். இந்நிலையில் அவருக்கு ஆரகிள் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

நெட்ரவால்கர் மும்பையில் பிறந்தவர். இந்திய அணிக்காக யு-19 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். 2010-ல் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பையில் இவர் இந்திய அணிக்காக விளையாடிய போது, இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. அப்போது பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஸமும் விளையாடினார். தற்போது பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்தார்.

ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடி உள்ளார். மும்பையில் உள்ள மிகச்சிறந்த பொறியியல் கல்லூரியில் படித்த அவர், மேற்படிப்பிற்காக அமெரிக்க சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆரகிள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்று அமெரிக்க அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முடிந்தப்பிறகு நெட்ரவால்கரின் திறமையைக் கண்டு பெருமையாக இருப்பதாக ஆரகிள் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.