இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற தெ.ஆ. அணிக்கு எதிரான டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் பிறகு 2 வாரங்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட சூர்யகுமார் யாதவ் நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் மும்பை அணிக்காக விளையாடவுள்ளார்.
மேலும், டிசம்பர் 21 அன்று தொடங்கவுள்ள விஜய் ஹசாரே போட்டியிலும் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷ்ரேயஸ் ஜயர் தலைமையிலான மும்பை அணியில், தேவைக்கு ஏற்ப எந்த வரிசையிலும் விளையாட தான் தயாராக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தெ.ஆ. டி20 தொடரில் பங்கேற்ற ஹார்திக் பாண்டியா, திலக் வர்மா, வருண் சக்ரவர்த்தி, ரிங்கு சிங் ஆகியோர் ஏற்கெனவே சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் வரிசையில் சூர்யகுமார் யாதவும் இணைந்துள்ளார்.