விளையாட்டு

மாதம் ரூ. 30 ஆயிரம்: காம்ப்ளிக்கு காவஸ்கர் நிதியுதவி

மீதமுள்ள காலத்துக்கும் மருத்துவ உதவித் தொகையாக ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரூ. 30,000 வழங்கப்படும்.

கிழக்கு நியூஸ்

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என சுனில் காவஸ்கரின் தி சாம்ப்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கருக்கு நெருங்கிய நண்பர். 52 வயதுடைய காம்ப்ளி இந்தியாவுக்காக 104 ஒருநாள் ஆட்டங்கள், 17 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். கடந்த டிசம்பரில் காம்ப்ளி மிகவும் உடல்நலிவுற்ற நிலையில் இருந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றது.

அவருடைய உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சையளித்த தானே ஆக்ரிதி மருத்துவமனை மருத்துவர் விவேக் திவிவேதி கூறுகையில், "வினோத் காம்ப்ளிக்கு வீட்டில் தசைப்பிடிப்பு மற்றும் தலைசுற்றல் இருந்தது. காய்ச்சல் மிக அதிகமாக இருந்தது. தசைப்பிடிப்பு காரணமாக நடப்பதற்கு சிரமப்பட்டார்.

அவரைப் பரிசோதனை செய்ததில் சிறுநீர் தொற்று இருந்தது. சோடியம், பொட்டாசியம் குறைபாடுகளும் உள்ளது. இதுவே தசைப்பிடிப்புக்குக் காரணம். மூளையில் ஸ்கேன் செய்து பார்த்ததில், பழைய ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. சமீபத்திய பக்கவாதம் காரணமாக இருக்கலாம். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சீராக உள்ளன. இவருக்கான சிகிச்சை மற்றும் பிசியோதெரபி தொடரும். அவரை இரண்டு, மூன்று நாள்களில் வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். எனினும், அவருடைய மூளைச் செயல்பாடுகள் நிலையானதாக இல்லை" என்றார் மருத்துவர் விவேக்.

கடும் நிதிச் சிக்கலில் சிக்கித் தவித்து வந்த வினோத் காம்ப்ளிக்கு உதவுவதாக சுனில் காவஸ்கர் கடந்த டிசம்பரில் உறுதியளித்திருந்தார். மேலும், கடந்த ஜனவரியில் வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது காவஸ்கரின் கால்களைத் தொட்டு வினோத் காம்ப்ளி வணங்கினார்.

இந்நிலையில், காம்பளிக்கு உதவுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, உடல்நலப் பாதிப்புகளிலிருந்து மீண்டு வரும் வினோத் காம்பிளிக்கு மாதந்தோறும் ரூ. 30,000 வழங்கப்படும் என சுனில் காவஸ்கரின் தி சாம்ப்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும், மீதமுள்ள காலத்துக்கும் மருத்துவ உதவித் தொகையாக ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரூ. 30,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.