ANI
விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு

சாம்பியன்ஸ் கோப்பை தோல்விக்குப் பிறகு சக வீரர்களிடம் முடிவைத் தெரிவித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

கிழக்கு நியூஸ்

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2010-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 116 டெஸ்ட், 170 ஒருநாள் மற்றும் 67 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் இல்லாததால், ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்தினார்.

ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஆட்டத்தில் ஸ்மித் 73 ரன்கள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார். அரையிறுதி தோல்விக்குப் பிறகு சக வீரர்களிடம் இதைத் தெரிவித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

"இதுவோர் அற்புதமான பயணம். ஒவ்வொரு நிமிடத்தையும் நான் விரும்பி அனுபவித்துள்ளேன். நிறைய, அட்டகாசமாக தருணங்களும் அழகான நினைவுகளும் உள்ளன.

இந்தப் பயணத்தில் உடன் பயணித்த அற்புதமான சக வீரர்களுடன் இரு உலகக் கோப்பைகளை வென்றது சிறப்பம்சம் கொண்டது. தற்போது 2027 உலகக் கோப்பைக்குத் தயாராக இது மிகச் சிறந்த தருணம் என்பதால், அதற்காக வழிவிட இதுவே சரியான நேரம்.

டெஸ்ட் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று, மேற்கிந்தியத் தீவுகள் தொடர், பிறகு சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் தொடர்களை எதிர்நோக்கியிருக்கிறேன்" என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஆஸ்திரேலிய டி20 அணியின் திட்டத்தில் இல்லை. ஆனால், 2028 ஒலிம்பிக் போட்டிகளில் டி20 கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் இருப்பதாக முன்பு தெரிவித்திருக்கிறார். எனவே, ஆஸ்திரேலிய அணி அழைத்தால், டி20 கிரிக்கெட்டில் அவர் விளையாடுவார்.

2015-ல் ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 2014-2015 மற்றும் 2020-2021-ல் ஆஸ்திரேலியாவால் சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2015 முதல் 2025 வரை ஆஸ்திரேலியாவை 64 ஒருநாள் ஆட்டங்களில் வழிநடத்தியுள்ளார். எனினும், உலகக் கோப்பைகளில் இவர் ஆஸ்திரேலியாவை வழிநடத்தியது கிடையாது.

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், அவருக்குப் பிடித்தமான டெஸ்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

ஒருநாள்

  • ஆட்டங்கள் - 170

  • ரன்கள் - 5,800

  • சராசரி - 43.28

  • சதங்கள் - 12

  • அரைசதங்கள் - 35