விளையாட்டு

கணவர் பாருபள்ளி காஷ்யபை பிரிந்தார் சாய்னா நேவால்

இவர்களுக்கு 2018-ல் திருமணம் நடைபெற்றது.

கிழக்கு நியூஸ்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், கணவர் பாருபள்ளி காஷ்யபைவிட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டகிராமில் சாய்னா நேவால் குறிப்பிடுகையில், "வாழ்க்கை சில நேரங்களில் மாறுபட்ட பாதைகளில் நம்மை அழைத்துச் செல்லும். நீண்ட சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு பாருபள்ளி காஷ்யம் மற்றும் நான் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். இருவரும் அமைதியையும் வளர்ச்சியையும் தேர்வு செய்துள்ளோம். நினைவுகளுக்காக என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நேரத்தில் புரிதலுக்கும் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதற்கும் நன்றி" என்று சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

சாய்னா நேவால் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்ற சாய்னா நேவால், மகளிர் ஒற்றையரில் நெ. 1 வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். பாருபள்ளி காஷ்யப் 2014 காமன்வெல்த் போட்டிகளில் பாட்மிண்டனில் தங்கம் வென்றார். இருவருமே புகழ்பெற்ற பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் அகாடெமியில் பயிற்சி பெற்றவர்கள். இவர்களுக்கு 2018-ல் திருமணம் நடைபெற்றது.

பாருபள்ளி காஷ்யப் கடந்த 2024-ல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார். கணவரைப் பிரிவதாக சாய்னா நேவால் அறிவித்தாலும் பாருபள்ளி காஷ்யப் தரப்பில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Saina Nehwal | Parupalli Kashyap