@srinathchess
விளையாட்டு

தமிழ்நாட்டைப் போல செஸ்ஸுக்கு ஆதரவு அளியுங்கள்: இந்தியப் பயிற்சியாளர்

தமிழ்நாட்டை போல் மற்ற மாநிலங்களிலும் செஸ் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆதரவு கிடைக்க வேண்டும்...

யோகேஷ் குமார்

தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து செஸ் ஒலிம்பியாட் ஆடவர் அணியின் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் மனம் திறந்துள்ளார்.

ஹங்கேரியின் புதாபெஸ்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாடில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்தன.

குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராதி, ஹரிகிருஷ்ணா, ஸ்ரீநாத் நாராயணன் (கேப்டன்) ஆகியோர் இந்திய ஆடவர் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீநாத் நாராயணன் செஸ் வளர்ச்சி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீநாத் நாராயணனின் எக்ஸ் பதிவு

“சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எங்களை வாழ்த்தினர். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசும், தமிழக விளையாட்டுத்துறையும் எங்களுக்கு அளித்த ஆதரவை எண்ணிப் பார்த்தேன்.

எங்களின் ஒலிம்பியாட் வெற்றி, முழுமையாக வளர்ந்த ஒரு பயிராகப் பார்க்கப்படலாம், ஆனால் நாங்கள் கடந்து வந்த பாதையில் விதைக்கப்பட்ட ஏராளமான விதைகள்தான் இதனை சாத்தியமாக்கின.

முதல் விதை, 2022-ல் சென்னையில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டி மூலம் விதைக்கப்பட்டது. இப்போட்டியின் மூலம் பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா, வந்திகா போன்ற பலரும் நமக்கு கிடைத்தனர். அங்கு கிடைத்த அனுபவம் நிச்சயம் அவர்களின் வளர்ச்சிக்கு உதவியிருக்கும்.

அதேபோல், அடுத்த விதை 2023-ல் சென்னையில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர் போட்டி மூலம் விதைக்கப்பட்டது. கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் குகேஷ் பங்கேற்க இப்போட்டி மிகவும் உதவியது. இந்தியாவில் செஸ் வளர, தமிழ்நாட்டை போல் மற்ற மாநிலங்களிலும் செஸ் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆதரவு கிடைக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.