படம்: tps://www.instagram.com/officialslc/ 
விளையாட்டு

மகளிர் ஆசியக் கோப்பை டி20: இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன்

கிழக்கு நியூஸ்

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி கோப்பையை வென்றது.

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டி கடந்த 19 அன்று தொடங்கியது. இலங்கையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 9-வது முறையாக ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை மகளிர் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிச் சுற்றில் இந்தியாவும், இலங்கையும் இன்று மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மட்டும் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். இவர் 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். நடு ஓவர்களில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் அதிரடி காட்டி 14 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு அந்த அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். ஹர்ஷிதா சமரவிக்ரமா கூட்டணிக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார். 43 பந்துகளில் 61 ரன்கள் விளாசிய அத்தபத்து, 12-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு, ஹர்ஷிதா மற்றும் கவிஷா தில்ஹாரி கூட்டணி அமைத்து இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார்கள். ஹர்ஷிதாவும் அரைசதம் அடிக்க, இவர்களுடையக் கூட்டணியை இந்தியப் பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.

18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்த இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை முதன்முறையாகக் கைப்பற்றியது.

2022-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியாவிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இலங்கை அணி. இன்று சொந்த மண்ணில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் அதே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது.