போல்ட் ANI
விளையாட்டு

இதுவே என் கடைசி டி20 உலகக் கோப்பை: டிரென்ட் போல்ட் அறிவிப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக டிரென்ட் போல்ட், நியூசிலாந்து அணியுடனான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

யோகேஷ் குமார்

நடப்பு டி20 உலகக் கோப்பையே தனது கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும் என நியூசி. வீரர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின. இன்று நடைபெற்ற உகாண்டா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 88 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. டிரென்ட் போல்ட் 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போல்ட், “இதுவே என் கடைசி டி20 உலகக் கோப்பை” என கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக டிரென்ட் போல்ட், நியூசிலாந்து அணியுடனான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இதுவரை 60 டி20 ஆட்டங்களில் விளையாடி 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி தனது கடைசி ஆட்டத்தில் பப்புவா நியூ கினியுடன் விளையாடவுள்ளது.