விளையாட்டு

என் வழி.. தனி வழி..: கேப்டன் பொறுப்பு குறித்து பும்ரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் பெர்த்தில் நாளை (நவம்பர் 22) தொடங்குகிறது.

யோகேஷ் குமார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்துவது குறித்து பும்ரா பேட்டியளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நாளை (நவம்பர் 22) தொடங்குகிறது.

ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், பெர்த் டெஸ்டில் இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பும்ரா.

பும்ரா பேசியதாவது

“கேப்டன் பொறுப்பு கிடைத்ததை கௌரவமாகப் பார்க்கிறேன். ஒரு கேப்டனாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆனால், எனக்கென தனி பாணி உள்ளது. நான் அணியை வழிநடத்துவதும் வித்தியாசமாக இருக்கும்.

பொறுப்புகளை எடுத்துக்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். முன்னதாக, ரோஹித் சர்மாவிடம் கேப்டன் செய்வது குறித்து பேசினேன். ஆஸி.க்கு வந்தவுடன் கேப்டன் பொறுப்பு குறித்து தெளிவு கிடைத்தது.

வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக இருக்க வேண்டும் என நான் பலமுறை செல்லியிருக்கிறேன். கம்மின்ஸ் சிறப்பான பணியை செய்திருக்கிறார். கபில் தேவ் மற்றும் இன்னும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டனர்.

வெற்றியோ தோல்வியோ முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நியூசிலாந்து தொடரில் இருந்து சில பாடங்களைக் கற்றுக்கொண்டோம். ஆனால் அப்போது இருந்த சூழலுக்கும், இனி விளையாடவுள்ள சூழலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது”.

இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.