விளையாட்டு

அஸ்வினை எதிர்கொள்வது எப்படி?: ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்

"அஸ்வினும் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவர் நல்ல திட்டங்களுடன் களமிறங்குவார்."

கிழக்கு நியூஸ்

பிஜிடி தொடர் நவம்பர் 22 அன்று தொடங்கவுள்ள நிலையில், அஸ்வினை எதிர்கொள்வது குறித்த திட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் விளக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22 அன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெறுகிறது. பிஜிடி தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். 18 டெஸ்டுகளில் 65.06 சராசரியில் 8 சதங்கள், 5 அரைசதங்கள் உள்பட 1,887 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய வீரராக ஸ்மித் திகழ்கிறார்.

சுழற்பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுக்கக்கூடிய வீரராக அஸ்வின் இருக்கிறார். இவரை எதிர்கொள்வதற்கான திட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்டுள்ளார்.

சிட்னி மார்னிங் ஹெரால்டுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

"5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்போது, 10 இன்னிங்ஸில் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு வீரர் மற்றொரு வீரர் மீது ஆதிக்கம் செலுத்திவிட்டால், ஒவ்வோர் ஆட்டத்திலும் சவாலான மனநிலையை எதிர்கொள்ள வேண்டும். தொடக்கத்திலேயே ஒருவரின் கை ஓங்கினால், மற்றொருவர் அழுத்தத்தை உணரத் தொடங்கிவிடுவார். இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரைப்போல 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் எங்கும் ஒளிந்துகொள்ள முடியாது. கடந்த காலங்களில் அஸ்வினுக்கும் எனக்கும் இடையே நிறைய போட்டிகள் இருந்துள்ளன.

2020-21 டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் என்னை ஸ்லிப் திசையில் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து மெல்போர்னில் லெக் ஸ்லிப்பில் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவில் ஆஃப் ஸ்பின் பந்தில் ஆட்டமிழப்பது எனக்குப் பிடிக்காது. ஆஃப் ஸ்பின் பந்துவீச்சை வலது கை பேட்டர்கள் எதிர்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. ஆனால், அஸ்வினும் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவர் நல்ல திட்டங்களுடன் களமிறங்குவார்.

இரு முறை அவர் என் மீது ஆதிக்கம் செலுத்தினார். அதன்பிறகு, சிட்னியில் நான் ஆதிக்கம் செலுத்தினேன். சிட்னியில் விளையாடியபோது, அஸ்வினைச் செயல்பட அனுமதிக்காமல், துடிப்பாக முன்முயற்சியோடு இருந்தேன். அது தான் என் வெற்றிக்குக் காரணம். அஸ்வினை, அவருடையத் திட்டங்களைச் செயல்பட அனுமதிக்காமல், அவர் விரும்பியபடி அவரை பந்துவீச அனுமதிக்காமல் அவருக்கு எதிராக துடிப்புடன் முன்முயற்சியோடு இருந்தாலே போதும்" என்றார் ஸ்டீவ் ஸ்மித்.

  1. பெர்த் டெஸ்ட்: நவம்பர் 22 - 26

  2. அடிலெய்ட் டெஸ்ட்: டிசம்பர் 6 - 10 (பகலிரவு)

  3. பிரிஸ்பேன் டெஸ்ட் (காபா): டிசம்பர் 14 - 18

  4. மெல்போர்ன் டெஸ்ட்: டிசம்பர் 26 - 30 (பாக்ஸிங் டே)

  5. சிட்னி டெஸ்ட்: ஜனவரி 3 - 7