மந்தனா ANI
விளையாட்டு

அதிக சதங்கள்: மிதாலியின் சாதனையைச் சமன் செய்த மந்தனா!

அடுத்தடுத்து சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

யோகேஷ் குமார்

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஆட்டங்களில் தொடர்ச்சியாக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி மூன்று ஒருநாள், ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 16 அன்று நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மந்தனா அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 117 ரன்கள் எடுத்தார்.

இன்று இவ்விரு அணிகளுக்கான 2-வது ஒருநாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 120 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் எடுத்தார். ஹர்மன்பிரீத் கௌர் ஆட்டமிழக்காமல் 103 ரனக்ள் எடுத்தார். இதன் மூலம் அடுத்தடுத்து சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா.

ஒருநாள் ஆட்டங்களில் இந்திய மகளிர் அணிக்காக தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ள மந்தனா, ஒருநாள் ஆட்டங்களில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீராங்கனைகள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜுடன் (211 இன்னிங்ஸ்) இணைந்துள்ளார். இருவரும் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர். மந்தனா 84 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.