விளையாட்டு

சையத் முஷ்டாக்: தமிழ்நாடு மீண்டும் தோல்வி!

முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற தமிழக அணி, அடுத்த இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.

யோகேஷ் குமார்

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது தமிழக அணி.

2024-25 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி கடந்த நவ.23 அன்று தொடங்கியது. இதில் 38 அணிகள் பங்கேற்கின்றன. இவை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழக அணி இடம்பெற்றுள்ள பிரிவில் திரிபுரா, சிக்கிம், பரோடா, குஜராத், கர்நாடகம், சௌராஷ்டிரம், உத்தரகண்ட் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் திரிபுராவை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் சிக்கிம் அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

3-வது ஆட்டத்தில் பரோடாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தமிழக அணி, இன்று குஜராத் அணியுடன் விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹேமங் படேல் 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர், குர்ஜப்நீத் சிங் மற்றும் எம். முஹமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் பிறகு விளையாடிய தமிழக அணி 18.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஷாருக் கான் 33 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் நாக்வாஸ்வாலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்த ஆட்டத்தில் தமிழக அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

அடுத்ததாக, டிச. 1 அன்று கர்நாடக அணியுடன் விளையாடுகிறது தமிழக அணி.