இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்தியா 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் பிர்மிங்கமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்தில் ஏற்கெனவே அறிவித்ததுபோல மாற்றம் எதுவும் இல்லை.
இந்திய அணியில் பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. சாய் சுதர்சன், ஷார்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். கருண் நாயர் 3-வது இடத்தில் விளையாடினார்.
இந்திய அணிக்கு இம்முறை தொடக்கம் சரியாக அமையவில்லை. கேஎல் ராகுல் 26 பந்துகளில் 2 ரன்களுக்கு போல்டானார்.
3-வது பேட்டராக களமிறங்கிய கருண் நாயர் தொடக்கத்தில் அற்புதமான டிரைவ் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளாக அடித்து கலக்கினார். யஷஸ்வி ஜெயிஸ்வாலும் பவுண்டரிகளாக நொறுக்கி 'ஜாஸ்பால்' ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 59 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார் ஜெயிஸ்வால். இந்த இணை 90 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தபோது, பிரைடன் கார்ஸ் வீசிய ஷார்ட் பந்தில் கருண் நாயர் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஷுப்மன் கில் பொறுமையின் சிகரமாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். சதத்தை நெருங்கிய ஜெயிஸ்வால் 87 ரன்களுக்கு பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 25 ரன்கள் மட்டும் எடுத்து ஷோயப் பஷீர் சுழலில் சிக்ஸர் அடிக்கப் பார்த்து பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார். நிதிஷ் குமார் ரெட்டியும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இந்திய அணி 211 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 125-வது பந்தில் அரை சதம் அடித்த கில் களத்தில் நிற்க, அனுபவமிக்க ரவீந்திர ஜடேஜா அவருடன் இணைந்தார். இருவரும் மிகப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கூட்டணியை படிப்படியாகக் கட்டமைத்தார்கள். சதத்தை நெருங்கிய ஷுப்மன் கில், பஷீர் சுழலில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்து சதமடித்தார். கில் டெஸ்ட் கேப்டன் ஆன பிறகு 3 இன்னிங்ஸில் இது 2-வது சதம்.
80 ஓவர்கள் ஆனவுடன் இங்கிலாந்து புதிய பந்தை எடுத்தது. புதிய பந்தில் 5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 114 ரன்களுடனும் ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துள்ளது.