ANI
விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் ஷுப்மன் கில்!

பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கிழக்கு நியூஸ்

ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை இன்று வெளியானது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அட்டகாசமாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்ற ஷுப்மன் கில், கடைசி ஒருநாள் ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, பேட்டர்களுக்கான தரவரிசையில் பாபர் ஆஸமைப் பின்னுக்குத் தள்ளி ஷுப்மன் கில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஷுப்மன் கில் முதலிடம் பிடிப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு 2023 உலகக் கோப்பையில் பாபர் ஆஸமைப் பின்னுக்குத் தள்ளி ஷுப்மன் கில் முதலிடம் பிடித்திருந்தார்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 6-வது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 9-வது இடத்திலும் உள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கிய இலங்கை கேப்டன் சாரித் அசலங்கா 8 இடங்கள் முன்னேற்றம் கண்டு 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தானில் கலக்கி வரும் சல்மான் ஆகா 24 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இலங்கையின் மஹீஷ் தீக்‌ஷனா முதலிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் இரண்டாவது இடத்துக்கு சரிவைச் சந்தித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த குல்தீப் யாதவ் நான்காவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

பேட்டர்களுக்கான தரவரிசை

  1. ஷுப்மன் கில் (இந்தியா) - 796 புள்ளிகள்

  2. பாபர் ஆஸம் (பாகிஸ்தான்) - 773 புள்ளிகள்

  3. ரோஹித் சர்மா (இந்தியா) - 761 புள்ளிகள்

  4. ஹெயின்ரிக் கிளாசென் (தென்னாப்பிரிக்கா) - 756 புள்ளிகள்

  5. டேரில் மிட்செல் (நியூசிலாந்து) - 740 புள்ளிகள்

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

  1. மஹீஷ் தீக்‌ஷனா (இலங்கை) - 680 புள்ளிகள்

  2. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 669 புள்ளிகள்

  3. பெர்னார்ட் ஸ்கால்ட்ஸ் (நமிபியா) - 662 புள்ளிகள்

  4. குல்தீப் யாதவ் (இந்தியா) - 652 புள்ளிகள்

  5. ஷஹீன் அஃப்ரிடி (பாகிஸ்தான்) - 646 புள்ளிகள்

ஆல்-ரௌண்டர்களுக்கான தரவரிசை

  1. முஹமது நபி (ஆப்கானிஸ்தான்) - 300 புள்ளிகள்

  2. சிகந்தர் ராஸா (ஜிம்பாப்வே) - 288 புள்ளிகள்

  3. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் (ஆப்கானிஸ்தான்) - 268 புள்ளிகள்

  4. மெஹிதி ஹசன் மிராஸ் (வங்கதேசம்) - 255 புள்ளிகள்

  5. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 247 புள்ளிகள்